பஞ்சாப் நேஷனல் வங்கியில் நிதி முறைகேடு செய்துவிட்டு, இந்தியாவில் இருந்து தப்பித்து, வெளிநாட்டில் வசித்து வரும் பிரபல குஜராத் வைர வியாபாரி நிரவ் மோடி வைத்திருந்த பிரபலமான ஓவியங்கள் ஏலம் விடப்பட்டது.
இதில் ஒரு ஓவியம் ரூ.22 கோடிக்கும், மற்றொரு ஓவியம் ரூ.14 கோடிக்கும் ஏலம் போனது. இது வியப்பை ஏற்படுத்தி உள்ளது.
பிரபல வைர வியாபாரியான நிரவ் மோடியும், அவருடைய உறவினர் மெகுல் சோக்ஷியும் பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.13,000 கோடி கடன் பெற்று மோசடி செய்து, இந்தியாவை விட்டு வெளியேறி னர். இங்கிலாந்தில் தலைமறைவாக வாழ்ந்துவருகின்றனர். சமீபத்தில் நிரவ் மோடி அங்கு வசித்து வந்தது தெரிய வந்த நிலையில், அவரை உடனடியாக இந்தியாவுக்கு நாடுகடத்த வேண்டும் என்ற கோரிக்கை இந்தியா தரப்பில் இருந்து வலியுறுத்தப்பட்டது. இதையடுத்து, லண்டனின் வெஸ்ட் மினிஸ்டர்ஸ் நீதிமன்றம் நீரவ் மோடியை பிடிப்பதற்கு வாரண்ட் பிறப்பித்தது. இந்நிலையில், லண்டனில் வைத்து நிரவ் மோடி கைது செய்யப்பட்டுள்ளார்
கைது செய்யப்பட்டு அங்கு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரை இந்தியா கொண்டு வருவதற்காக முயற்சி மேற் கொள்ளப்பட்டு வருகிறது என மத்திய அரசு தெரிவித்து உள்ளது.
இந்த நிலையில் நிரவ் மோடியின் வீடு மற்றும் அலுவலகத்தில் கைப்பற்றப்பட்ட 173 விலை உயர்ந்த ஏராளமான ஓவியங்கள், அவரின் சொகுசு கார்களை யும் ஏலத்தில் விற்பனை செய்வதற்கு வருமான வரித்துறை நடவடிக்கை எடுத்தது. இதற்கான அனுமதியை மும்பை தனிக்கோர்ட்டு வழங்கியது.
நிரவ் மோடியிடம் இருந்து கைப்பற்றப்பட்ட ஓவியங்கள் மட்டுமே ரூ.57 கோடியே 72 லட்சம் மதிப்புடையவை என தகவல்கள் கூறுகின்றன. ரோல்ஸ் ராய்ஸ், போர்ஸ், மெர்சிடஸ், டயோட்டா பார்ஜூனர் என 11 சொகுசு கார்களும் ஏலத்தில் விற்பனை செய்யப்பட உள்ளன.
மத்திய அமலாக்கத்துறையும் வருமான வரித்துறையும் இன்று நிரவ் மோடியின் ஓவியங்களை ஏலத்தில் விட்டன.
இதில், பெயரிடப்படாத எண்ணை டிராப்ஸ் உள்ளது போன்ற ஓவியம் ரூ.22 கோடிக்கு விலை போயுள்ளது. அதுபோல, திருவாங்கூர் மகாராஜா மற்றும் அவரது இளைய சகோதரரை ரிச்சர்டு வரவேற்கும் ஓவியம் ரூ.14 கோடிக்கு விற்பனை ஆகி உள்ளது.
‘இரு ஓவியங்கள் மட்டுமே ரூ.36 கோடிக்கு விற்பனையாகி உள்ளது பெரும் வியப்பை ஏற்படுத்தி உள்ளது.
இவற்றின் விற்பனை தொகை, அரசு கருவூலத்தில் டெபாசிட் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.