டில்லி
பஞ்சாப் நேஷனல் வங்கியில் மோசடி செய்து தப்பி ஓடிய நிரவ் மோடி ஹாங்காங்கில் பதுங்கி உள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
பிரபல நகை வர்த்தக தொழில் அதிபர் நிரவ் மோடி பஞ்சாப் நேஷனல் வங்கியில் பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய் மோசடி செய்து விட்டு கூட்டாளி மற்றும் குடும்பத்தினருடன் நாட்டை விட்டு ஓடி விட்டார். அவர்களை சிபிஐ தீவிரமாக தேடி வருகிறது. மாநிலங்கள் அவையில் இது குறித்து கேள்வி ஒன்று எழுப்பப்பட்டது.
அந்தக் கேள்வியில், “வங்கியில் கோடிக்கணக்கில் மோசடி செய்து தப்பி ஓடிய நிரவ் மோடி மற்றும் மெகுல் சோக்சி எந்த நாட்டில் மறைந்துள்ளனர் என்பதை அரசு கண்டு பிடித்துள்ளதா? அவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது?” என கேட்கப் பட்டிருந்தது. இந்த கேள்விக்கு மத்திய வெளியுறவுத் துறை இணை அமைச்சர் வி கே சிங் எழுத்து மூலம் பதில் அளித்துள்ளார்.
அந்த பதிலில், “நிரவ் மோடியும் மெகுல் சோக்ச்யும் தலமறைவுக் குற்றவாளிகள் என இந்திய அரசால் அறிவிக்கப் பட்டுள்ளனர். அவர்கள் தற்போது ஹாங்காங்கில் பதுங்கி உள்ளது கண்டறியப் பட்டுள்ளது. ஹாங்காங் அரசுக்கு நிரவ் மோடியை கைது செய்ய உதவுமாறு கோரிக்கை விடப்பட்டுள்ளது. நிரவ் மோடியும் மெகுல் சோக்சியும் தலை மறைவுக் குற்றவாளி என அறிவிக்கப் பட்டுள்ளதால் ஹாங்காங் அரசுக்கு இவ்வாறு கோரிக்கை விடப்பட்டுள்ளது. அவர்கள் இருவரது பாஸ்போர்ட்டுகளும் ஏற்கனவே முடக்கப்பட்டுள்ளன” என தெரிவிக்கப்பட்டுள்ளது.