நெட்டிசன்:

நரேன் ராஜகோபாலன் (Narain Rajagopalan )அவர்களது முகநூல் பதிவு:

நீரவ் மோடி + கீதாஞ்சலி ஜெம்ஸ் + பஞ்சாப் நேஷனல் வங்கி கதைகளை முழுமையாகப் படித்தேன்.

குற்றம். நடந்தது என்ன?

இது ஒரு டெக்னிகல் விளையாட்டு. தமிழில் எப்படி எளிமையாக எழுதுவதென்று தெரியவில்லை. மேட்டர் இது தான்.

நீரவ்வின் நிறுவனங்கள் வெளிநாட்டிலிருந்து வைரம் சம்பந்தப்பட்ட பொருட்களை (வைரத்தையும் சேர்த்து) இறக்குமதி செய்து உலகளாவிய அவர்களுடைய ஸ்டோர்களில் சாதா நகைகளாக, டிசைனர் ஜுவலரிகளாக விற்கிறார்கள். இது தான் தொழில். இதில் இறக்குமதி செய்யும் போது விற்பவர்க்கு பணம் கொடுக்காமல் அவர் அதை அவருடைய இடத்திலிருந்து ஏற்றுமதி செய்யமாட்டார். ஆகவே 100% அட்வான்ஸ் இல்லாமல் இது நடக்காது.

இந்த 100% அட்வான்ஸ் தருவதை வழக்கமாய் எல்.சி என்றழைக்கப்படும் Letter of Creditல் செய்வார்கள். ஆனால் எல்.சியில் இருக்கும் சிக்கல், 110% வங்கியில் வைத்தாலேயொழிய 100% எல்.சி வங்கி தராது. எல்.சியை இரு நாட்டு வங்கிகளும் செக் செய்யாமல் பொருள் நகராது. இது தான் நடைமுறை.

நீரவ் மோடியின் மீதும், வங்கி ஊழியர்களின் மீதும் சுமத்தப்பட்டிருக்கும் குற்றம் இந்த நடைமுறையை மீறி, எந்த கொலட்ராலோ, வைப்பு நிதியோ இல்லாமல், ஒட்டைகளைப் பயன்படுத்தி பணத்தினை வெளியே அனுப்பியது. இன்னொன்று, இந்த இறக்குமதி இன்வாய்ஸ்கள் எல்லாமே நீரவ்வே உருவாக்கிய போலி நிறுவனங்கள் வெளிநாட்டில் இருந்த படி நீரவ்வின் நிறுவனங்களுக்கு ஏற்றுமதி செய்தது போல இருந்ததும்.

டெக்னிகலாக இது லோன்/கடன் கிடையாது. கொலட்ரால் இல்லாமல் கொடுத்து ஆட்டையைப் போட்டதால் மொத்தமாய் வழித்து நக்கிக் கொண்டுப் போய் விட்டது.

ஆக LOUவினை வெளிநாட்டு வங்கிகள், வெளிநாட்டில் இருக்கும் இந்திய வங்கிகளின் கிளைகள் மதித்து அந்த ஊரில் இருக்கும் ‘பினாமி நிறுவனங்களுக்கு’ பணத்தினை ட்ரான்ஸ்பர் செய்து விட்டன. LOU கொடுத்தது – பிஎன்பி. பி என் பி கையில் எந்த வைப்போ, கொலட்ரலோ கிடையாது. ஆக இப்போது LOU கொடுத்த காரணத்தினால் பி என் பி கையை விட்டு காசினை செட்டில் செய்தாக வேண்டும்.

குறைவான லஞ்சம், ஊழல், படைபலத்தில் பெரும்பகுதி பணம் சுவிட்சர்லாந்திலோ, கேமென் தீவிலோ, பிரிட்டிஷ் விர்ஜின் தீவிலோ, ஜெர்சியிலோ இப்போது சமர்த்தாக இருக்கிறது. நீரவ் இந்தியாவில் இல்லை. கொலட்ரால் கையில் இல்லை. பி என் பி சிபிஐக்கு போய் விட்டது. இது இனி மேல் அனுமார் வால் போல நீளும்….. மேட்டர் இவ்ளோ தான்…

Key Pointers

1) 10% மார்ஜின் கவர் நீரவ் கட்டமுடியாமல் போனதால் தான் இது அம்பலத்திற்கு வந்திருக்கிறது.

2) பத்திரிக்கைகளில் வருவதுப் போல பஞ்சாப் நேஷனல் வங்கி ‘தானாகவே’ முன்வந்து இதை கண்டறியவில்லை. பிஎன்பி Letter of Understanding கொடுத்திருக்கிறது (LOU என்பது கிட்டத்திட்ட கியாரண்டி கையெழுத்துப் போல. வாங்கியவர் தரவில்லை என்றால், கியாரண்டிப் போட்டவர் தர வேண்டும்) அதை ஒரு ஹாங்காங் வங்கி கையில் எடுத்து பணத்தினை செட்டில் செய்ய சொல்லி இருக்கிறது. அப்போது தான் பிஎன்பிக்கு ஏதோ தவறு நடக்கிறது என்று மோப்பம் பிடிக்க ஆரம்பித்து இருக்கிறார்கள்.

3) மாட்டியது பி என் பி மட்டுமல்ல. பொதுத்துறையில் யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா, அலஹாபாத் வங்கி மற்றும் தனியாரில் ஆக்சிஸ் வங்கிக்கும் இதில் exposure இருக்கிறது.

4) Core Banking Vs. SWIFT Transfer என்று ஒரு விவாதம் ஒடிக் கொண்டிருக்கிறது. பல வங்கிகளில் வெளிநாட்டு பரிவர்த்தனைகள் கோர் பேங்கிங் உள்ளே வருவதில்லை என்பது தான் நிதர்சனம். இது ப்ராசஸ் & சாப்ட்வேர் சிக்கல். குறிப்பாக, பி என் பி பாவிப்பது இன்போசிஸின் பினாக்கிள் என்கிற சாப்ட்வேர். அதில் இந்த ஸ்விப்ட் வழி மாடல்கள் கோர் வங்கி சாப்ட்வேருக்குள் கிடையாது.

5) முக்கியமாக இது காங்கிரஸ் ஆட்சியில் கொடுக்கப்பட்டது என்கிற பிரமையினை சங்கிகள் மெனக்கெட்டு உருவாக்கிக் கொண்டு இருக்கிறார்கள். ஆனால் விஷயம் அதுவல்ல. ஒருவேளை அது பாஜக ஆட்சியாய் இருந்தாலும் இது நடந்திருக்க வாய்ப்பிருக்கிறது. மும்பை கிளையின் இரண்டு ஜூனியர் ஊழியர்கள் மற்றும் இன்னபிற மேல் தட்டு ஆட்கள் இந்த விளையாட்டினை ஆடி இருக்கிறார்கள். தொடர்ச்சியாய் பணத்தினை சுழற்சி செய்த வகையில் சிக்கல் இல்லாமல் இருந்தது. எப்போது LOUவிற்கு 100% கேஷ் கொலட்ரால் கேட்டார்களோ அங்கே மாட்டிக் கொண்டார்கள். அம்புட்டு தான் விஷயம்.

இப்போது மாட்டிக் கொண்டிருப்பது பி என் பி தான். 11000+ கோடிகளை LOUவிற்கு எதிராக அவர்கள் தான் தர வேண்டும். நீரவ்விடம் இருந்து வசூலிப்பது, சிபிஐ விசாரணை, ஈ டி ரெய்டு, ரெவ்னியு இண்டெலிஜென்ஸ் குமாஸ்தாக்கள் கோப்புகள் தயாரிப்பது எல்லாம் நடந்தாலும் அடுத்த பத்து வருடங்கள் ஆகலாம்.

நீரவ் செய்த கடைசி LOU ட்ரான்ஸ்பர் ஜனவரி 5-ஆம் தேதி நடந்திருப்பதாக ஒரு தகவல் சொல்கிறது. ஆக போன மாதம் வரைக்கும் ‘சிஸ்டம்’ சரியாக இயங்கியதால் சிக்கல் இல்லை. நடுவில் ஏதோ நடந்து சொதப்பி இருக்கிறது. மொத்தமாய் காற்றில் கட்டப்பட்ட சீட்டுக் கட்டு கோபுரம் கலைந்து விழுந்திருக்கிறது. இப்போது இதில் சம்பந்தப்பட்ட ஆட்கள் (வங்கிகள், முதலீட்டு நிறுவனங்கள், நீரவ் மோடியின் நிறுவனங்கள்) washing their dirty linen in public.

மேலும் பி என் பி, சிபிஐயிடம் கொடுத்திருக்கும் புகாரில் குறிப்பிட்டிருக்கும் தொகை 280 கோடிகள் மட்டுமே, 11,400 கோடிகள் கிடையாது.

நீரவ் குடும்பத்தோடு பெல்ஜியத்தில் இந்நேரத்திற்கு ஹாயாக ஏதாவது ஒரு ஏரியில் மீன் பிடித்துக் கொண்டிருக்கலாம்.

வாழ்க ஜனநாயகம்!!