திருவனந்தபுரம்:
நிபா வைரஸ் குறித்து மக்கள் பதற்றமடைய வேண்டாம் என்று கேரளா சுகாதாரத்துறை அமைச்சர் அறிவுரை வீணா ஜார்ஜ் அறிவுரை வழங்கியுள்ளார்.
கேரளாவில் கொரோனா பரவலுக்கு இடையே அங்கு ஒரு சிறுவனுக்கு நிபா வைரஸ் தாக்குதல் ஏற்பட்டது. கோழிக்கோடு மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு சிறுவனுக்கு இந்த பாதிப்பு ஏற்பட்டது. கோழிக்கோடு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அந்த சிறுவன் தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வந்தார். அவருக்கு அறிகுறிகள் தீவிரமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. கடுமையான நிபா அறிகுறிகளுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அந்த சிறுவன் இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
நிபா வைரஸ் ஒருவரிடம் இருந்து இன்னொருவருக்குப் பரவும் திறன் கொண்டதாகும். இதனால் அவரின் குடும்பத்தினர் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். அதோடு இந்த சிறுவனோடு நெருக்கமாக இருந்தவர்கள் தற்போது தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.
இதுகுறித்து பேசிய கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவிக்கையில், நிபா வைரஸ் குறித்து மக்கள் பதற்றமடைய வேண்டாம் என்றும், சிறுவனின் குடும்பத்தினருக்கு நிபா வைரஸ் தொற்று அறிகுறிகள் இல்லை என்றும் கூறியுள்ளார்.