கழுத்தில் கட்டுப்போடப் பட்டுக் கூப்பிய கைகளுடன், சட்டையின்றி மருத்துவமனை படுக்கையில் காணப்பட்ட எம் ஜி ஆரின் குண்டடி சிகிச்சைப் புகைப்படம் தான், 1967 ல் மதராஸ் மாகாண தேர்தலில் அதிகமாகக் காணப்பட்ட படம். அவருடைய இந்த புகைப்படத்தின் மூலம் திமுகவின் வெற்றி, மாநிலம் முழுவதும் உறுதி செய்யப்பட்டது.
1967 ல் ஜனவரி மாதம் 12 ஆம் தேதி அன்று எம் ஜி ஆர் ரசிகர்கள் தங்கள் தலைவர் நடித்த ”தாய்க்குத் தலைமகன்” என்னும் பட வெளியீட்டுக்காகக் காத்துக் கொண்டிருந்தனர். அடுத்து வர உள்ள பொங்கல் பண்டிகையாலும் ஒரு மாதத்தில் நடைபெற இருந்த தேர்தலாலும் நகரமே திருவிழாக்கோலம் பூண்டிருந்தது. மக்கள் திலகம் என அழைக்கப்படும் எம் ஜி ஆர் தனது சக நடிகர் எம் ஆர் ராதாவால் ராமாவரம் தோட்டத்தில் மாலை ஐந்து மணிக்குச் சுடப்பட்டார் என்னும் செய்தியை முதலில் பலரும் நம்பவில்லை.
எம் ஜி ஆரை சுட்டவர் மதராஸ் ராஜகோபாலன் ராதாகிருஷ்ணன் என்னும் முழுப்பெயர் கொண்ட நடிகர் எம் ஆர் ராதா. அவசர சிகிச்சைக்காக ராயப்பேட்டை மருத்துவமனையில் எம் ஜி ஆர் அனுமதிக்கப்பட்டதை அடுத்து சில மணிகளில் அங்கு 50000 பேர் திரண்டனர். வாகன போக்குவரத்து அடியோடு நின்று போனது. தெருவில் அழுதபடி மக்கள் காணப்பட்டனர். கடைகள் மூடப்பட்டன.
வெறி கொண்ட ஒரு சில எம் ஜி ஆர் ரசிகர்கள் வாகனங்களின் மீது கற்களை வீசி கலாட்டா செய்தனர். எம் ஜி ஆர் ரசிகர்களில் சிலரால் எம் ஆர் ராதாவின் வீடு சூறையாடப்பட்டது.
மிக அருகிலிருந்து சுடப்பட்டதால் எம் ஜி ஆரின் இடது காதினருகில் துப்பாக்கிக் குண்டு உள் சென்றது. எச்சரிக்கை அடைந்த எம் ஜி ஆர் தனது நினைவை இழக்கும் முன்பு காரில் ஏறி மருத்துவமனைக்குச் செல்ல ஓட்டுநருக்கு உத்தரவிட்டார்.
எம் ஜி ஆரை சுட்ட பிறகு எம் ஆர் ராதா தன்னை சுட்டுக் கொண்டு தற்கொலைக்கு முயன்றார். அவரும் ராயப்பேட்டை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பிறகு இருவரும் அரசு பொது மருத்துவமனைக்கு ஒரே ஆம்புலன்ஸ் மூலம் மாற்றப்பட்டனர். இருவருக்கும் ஒரே மருத்துவர் அறுவை சிகிச்சை செய்தார்.எம் ஜி ஆரின் இடது காதுக்குள் புகுந்த துப்பாக்கிக் குண்டு கழுத்தை இணைக்கும் முதல் முதுகெலும்பினுள் சென்றுவிட்டது. அதை எடுப்பதால் வேறு பல தொல்லைகள் நேரிடலாம் என மருத்துவர்கள் தெரிவித்தனர். (சில மாதங்கள் கழித்து எம் ஜி ஆர் இருமும் போது அந்த குண்டு தானாகவே வெளியே வந்தது)
எம் ஜி ஆருக்கு அடுத்த நாள் நினைவு திரும்பியது. அந்த தேர்தலில் பிரசாரம் ஏதும் செய்யாமலே அவர் 37000 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
”அரச கட்டளை” திரைப்படத்துக்கு எம் ஜி ஆரின் வசனங்கள் ஏற்கனவே பதிவு செய்யப்பட்டு விட்டன. அதற்குப் பிறகு வந்த காவல்காரன் திரைப்படத்தில் அவருக்கு டப்பிங் குரல் கொடுக்கலாம் என ஆலோசிக்கப்பட்டது. ஆனால் எம் ஜி ஆர் அதைப் பிடிவாதமாக மறுத்தார். அவர், “இந்த படத்தில் மட்டுமல்ல, இனி வரும் படங்களிலும் தான் தனது சொந்தக் குரலில் பேசுவேன் என்றார். அப்படி இல்லை எனில் திரைப்பட நடிப்பை நிறுத்தி விடுவேன்” எனத் தெரிவித்தார்.
தனது குரலைத் திரும்பப் பெற எம் ஜி ஆர் பல முயற்சிகள் செய்தார். கழுத்து வரை கடலில் நின்றபடி பேச்சு பயிற்சிகள் செய்தார். ஆனாலும் காவல்காரன் படத்தில் அவர் பல வார்த்தைகள் குழறியும், தவறான உச்சரிப்புடனும் பேசியுள்ளதை இன்றும் கேட்கலாம். அதன் பிறகு எம் ஜி ஆர் 42 படங்களில் தானே பேசி நடித்துள்ளார். அது மட்டுமின்றி தேர்தல் கூட்டங்களிலும் சட்டப்பேரவைகளிலும் பல முறை உரையாற்றி உள்ளார்.
துப்பாக்கிச் சூடு நடந்து ஆறு வாரங்களுக்குப் பிறகு காவல்துறை ராதா மீது கொலை மற்றும் தற்கொலை முயற்சிக்காகக் குற்றப்பத்திரிகை பதிந்தது. புதிதாக ஆட்சி அமைத்துள்ள திமுக அரசு நியாயமான முறையில் வழக்கை நடத்தாது என ராதா தெரிவித்து இந்த வழக்கை உச்சநீதிமன்றத்துக்கு மாற்றக் கோரிக்கை விடுத்தார். புகழ்பெற்ற வழக்கறிஞர்கள் இரு பக்கமும் வாதாடினார்கள். ராதாவுக்கு 7 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. பிறகு அந்த தண்டனை மனிதாபிமான அடிப்படையில் உச்சநீதிமன்றத்தால் ஐந்து வருடமாகக் குறைக்கப்பட்டது
-வெங்கடேஷ்