சென்னைக்கு அருகில் ஓடும் கொசஸ்தலையார் ஆறு மிகவும் சரித்திரம் வாய்ந்த ஆறாக இருந்தாலும் எப்போதும் காய்ந்து காணப்படும். ஆனால் வருடத்தில் குறைந்தது ஒரு வாரத்துக்கு மதயானைகளின் கூட்டம் ஓடுவது போல வெள்ளம் வருவதும் அந்த நீர் கடலில் கலந்து வீணாவதும் அந்த ஆற்றின் பெருமைகளில் ஒன்றாகும்.

1939 ல் ஏற்பட்ட கடும் பஞ்சத்தினால் குடிமக்கள் செயலற்ற மாநகராட்சி மீது கடும் கோபம் அடைந்தனர். அடுத்த வருடம் மாநகராட்சி மேயராக
பொறுப்பேற்ற புதுக்கோட்டைச் சமஸ்தானத்தைச் சேர்ந்த காங்கிரஸ் தலைவர் சத்திய மூர்த்தி வீணாகும் வெள்ள நீரைச் சேகரித்து நீர் தட்டுப்பாட்டைப் போக்க முடிவெடுத்தார்.

சென்னைக்கு வடகிழக்கே 50 கிமீ தூரத்தில் ஒரு அணைக் கட்டி அங்கு நீரைச் சேகரிக்க முயற்சி எடுக்கப்பட்டது. இந்த முயற்சி சென்னை நகரின் பல நீர்  தேவைகளைப்  போக்கி பல லட்சம் மக்களை நகருக்குள் வர ஏதுவாக  வழி செய்து.

கொசஸ்தலையார் ஆற்றின் இடையில் இரு மலைகளை இணைக்கும் வகையில் இரும்பு மதகுகள் கொண்ட கட்டுமானம் அமைக்கத் திட்டமிடப்பட்டது. சுமார் 2.5 மைல் தூரம் உள்ள அந்த இரு மலைகளுக்கு இடையில் ஒரு மண் கரை அமைக்கப்பட்டு 12.5 சதுர மைல் உள்ள ஏரியை உருவாக்கி அதன் நடுவில் 250 கோடி கன அடி தண்ணீர் சேமித்து வைக்க முடிவு செய்யப்பட்டது.

இந்த ஏரியில் முழுக உள்ள 18 கிராம மக்களுக்கு இழப்பீடாக ரூ.22.5 லட்சம் அளிக்கப்பட்டு பணத்தை வீணாக்காமல் நிலத்தில் முதலீடு செய்ய அறிவுரை வழங்கப்பட்டது.

இந்த ஏரியில் திருவென்பாக்கம் கோவில் மூழ்கியது. இந்த கோவிலுக்குக் கடந்த 8 ஆம் நூற்றாண்டில் நாயன்மார்களில் ஒருவரான சுந்தரர் கண் பார்வை இழந்த பிறகு கோவிலுக்கு வந்துள்ளார். மக்கள் சுந்தரரால் பார்க்க முடியாத கோவிலை வேறு யாரும் பார்க்க முடியாத நிலை ஏற்பட்டு விட்டதாகக்கூறினார்கள்.

போர் நடக்கும் வேளையில் ரூ. 60 லட்சம் செலவுக்கு மாநகராட்சி ஒப்புக் கொள்ளாது என சத்தியமூர்த்தி எதிர்பார்த்தார். இதனால் உறுப்பினர்களைச் சமாளிக்க இளம் செயல் பொறியாளரான ஆனந்த ராவுக்குப் பதில் மூத்த பொறியாளரும் ஆங்கிலேயருமான டவுலியை கவுன்சில் கூட்டத்துக்கு அனுப்பினார். தீர்மானம் நிறைவேறியது. டவுலிக்கும் இந்த அணைக்கும் சம்பந்தமேயில்லை,.

சத்தியமூர்த்தி மேயர் பதவி வகித்த ஓராண்டுக் காலத்திலேயே இந்த திட்டம் அங்கீகாரம்  பெற்றது. தொடக்க விழாவில் இது குறித்து விளக்கமளிக்கையில் இரண்டு வருடத் தண்ணீர் பஞ்சத்தையும் பெண்கள் காலிக்குடங்களுடன் குடிநீர் குழாய் அருகே காத்திருந்ததையும் சத்திய மூர்த்தி சோகத்துடன் சுட்டிக் காட்டினார். மேலும் அவர், “அந்த துயரம் இனி மறைந்து போகும். மதராஸ் நகரம் இனி புல்வெளிகள் மற்றும் நீச்சல் குளங்களுடன் மிளிரும்” எனத் தெரிவித்தார்.

ஆனாலும் சத்தியமூர்த்தி தனது கோபத்தை அருகில் அமர்ந்திருந்த பிரிட்டிஷ் கவர்னருக்கு, அவரது உரையின் முடிவில் தெரியப்படுத்தினார். “எனது நாட்டின் எதிர்காலம் இன்னும் கேள்விக்குறியாக இருந்த போதிலும் எனது நகரின் முக்கிய தேவைகள் மீது முழு நம்பிக்கை வந்துள்ளது” எனக் குறிப்பிட்டார்.


ஆனால் சத்திய மூர்த்தி இந்த ஏரி முடிவடைந்ததையோ அல்லது சுதந்திரம் அடைந்ததையோ பார்க்க முடியாமல் மறைந்து போனது சோகமான ஒன்றாகும். இந்த ஏரி 1944 ல்  ஜூன் 15 ஆம் தேதி கவர்னரால் திறக்கப்பட்டது. இந்த ஏரிக்கு சத்தியமூர்த்தியின் பெயரை வைக்கப் பல முறை முயன்றும் அவையாவும் தோல்வியில் முடிந்தது.

அரசு இந்த ஏரியினால் மூழ்கிப் போன கிராமமான பூண்டியின் பெயரை ஏரிக்குச் சூட்டியது. சுதந்திரத்துக்குப் பிறகு சத்தியமூர்த்திக்குத் தரவேண்டிய
மரியாதை தரப்பட்டது.

-வெங்கடேஷ்