1943 ல் பேசப் பயன்படுத்தப்படும் இனிமையான தமிழ் மொழியில் ஏன் பாடக்கூடாது என ஒரு கேள்வி எழுந்தது.

ஜமின்தாரர்களின் ஆதரவுடன்  நிர்வகிக்கப்பட்டுவந்த கர்நாடக சங்கீதத்தைச்  சபைகள் எடுத்து நத்த ஆரம்பித்த நேரமது
1930 / 1940களில் கர்நாடக சங்கீத கச்சேரிகளில் முதல் பகுதியில் தெலுங்கு மற்றும் சமஸ்கிருத பாடல்கள் பாடப்பட்டு வந்தன. அதன் பிறகு துக்கடா என்னும் தனிப் பிரிவில் தேவாரம் அல்லது திருப்புகழ் எப்போதாவது அதிசயமாக இடம் பெற்றன.

அப்போதெல்லாம் தமிழ் மொழி என்பது இசையற்ற மொழி எனக் கிண்டல் செய்யப்பட்டது. தமிழ் ஆதரவு போராட்டக்காரர்கள் கர்நாடக சங்கீத கச்சேரிகளில் தமிழ்ப் பாடல்கள் இசைக்க வேண்டும் என அறிவித்தனர். பாடல்களின் சாகித்தியங்கள் தங்களது தாய் மொழியிலிருந்தால் ரசிகர்கள் மகிழ்வை உணர முடியும் எனவும் தெரிவித்தனர்.

அவர்களுக்கு எதிர்க் கட்சியான மியூசிக் அகாடமி தெலுங்கு மற்றும் சமஸ்கிருதக் கச்சேரிகளே மதிப்பானவை என வாதிட்டது.

மிகுந்த எதிர்ப்பு எழுந்ததால் தமிழ் இசை இயக்கம் தனக்கென ஒரு தனி நிறுவனம் தேவை என்பதை உணர்ந்தது. 1943 ல் ஜூன் மாதம் ராஜா சர் அண்ணாமலைச் செட்டியார் தமிழ் இசை சங்கம் என்னும் அமைப்பை உருவாக்கினார். (இந்த பெயர் ராஜாஜியால் தேர்வு செய்யப்பட்டது). டிசம்பரில் நடக்கும் மியூசிக் அகாடமி இசை விழாவுக்கு இணையாகத் தமிழ் இசை சங்கமும் விழா நடத்தத் தொடங்கியது. இந்த விழாவில் கலந்து கொண்ட பாடகர்கள் திரையுலக தொடர்பு கொண்டவர்கள் என்பதால் ஆதரவு கிட்டியது.


எம் எஸ் சுப்புலட்சுமி, எம் கே தியாகராஜ பாகவதர், கே பி சுந்தராம்பாள், ஜி என் பாலசுப்ரமணியம் மற்றும் மதுரை மணி ஐயர் உள்ளிட்டோர் இந்த சங்கத்தில் பாடியதால் மியூசிக் அகாடமி போன்ற சபைகள் இவர்கள் மீது வெறுப்படைந்தன. அதன் பிறகு சங்கத்தில் பாடியவர்களில் பலரை மியூசிக் அகாடமி ஒதுக்கியும் வைத்தது. ஆரம்பக் காலத்திலிருந்தே எம் எஸ் மற்றும் கல்கி ஆகியோர் தமிழ் இசை இயக்கத்துக்கு ஆதரவு அளித்து வந்தனர். இதன் மூலம் இந்த சங்கம் ஆரம்பத்திலேயே சிதறாமல் காக்கப்பட்டது. அது மட்டுமின்றி எம் எஸ் பாடிய கல்கியின் கர்நாடக இசை திரைப்படப் பாடல்கள் லட்சக்கணக்கானோரால் பாராட்டப்பட்டது. இதைப் மேடையில் பாடிய பல கர்நாடக வித்துவான்கள் நினைத்துப் பார்த்திருக்க முடியாது.

இதனால் எம் எஸ் ஒரு சர்ச்சையில் நடுவே சிக்கிக் கொண்டார். அவருக்கு ஐந்து வருடங்களுக்கு மதராஸ் மியூசிக் அகாடமி தடை விதித்தது. அது மட்டுமின்றி மியூசிக் அகாடமி ”தமிழைசேஷன்” க்கு எதிராகத் தனது கருத்துக்களைத் தெரிவித்தது. அத்துடன் பரவி வரும் தமிழ் வியாதியைத் தடுத்து நிறுத்தவும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பத்திரிகைகளில் கடும் போர் நிலவியது. நூற்றுக் கணக்கான தமிழ் சங்கீத வித்துவான்கள் பல வருடம் முயன்று கச்சேரியில் பாடத் தகுந்த பாடல்களைத் தேடினார்கள். ஏற்கனவே சுதந்திரப் போராட்டத்தால் புகழடைந்த பாரதியார் பாடல்களைக் கச்சேரிகளில் இடம் பெற்றன. அத்துடன் ஆழ்வார்கள், நாயன்மார்கள் மற்றும் ராமலிங்க அடிகள் ஆகியோரின் பாடல்களும் இசை வடிவம் பெற்றன.

முதலில் அரண்மனைக்காரன் தெருவில் ஒரு வாடகை இடத்தில் இயங்கி வந்த தமிழ் இசை சங்கம் அதன் பிறகு 1950களில் எஸ்பிளனேட் பகுதியில் உள்ள ஒரு அருமையான சொந்த கட்டிடத்தில் குடி புகுந்தது. அந்த கட்டிடத்தின் வாசலில் சங்கத்தின் அமைப்பாளர் அண்ணாமலை செட்டியாரின் பெரிய உருவச் சிலை அமைக்கப்பட்டது. அதற்குள் இரு தரப்பிலும் கோபங்கள் கட்டுக்குள் வந்தன. இருவரும் ஒருவரை ஒருவர் மதித்து மரியாதை அளிக்க ஆரம்பித்தனர்.


பல ஆண்டுகளாக மியூசிக் அகாடமி பக்கம் வராத எம் எஸ் மீண்டும் மியூசிக் அகாடமிக்கு திரும்பியதால் அங்குள்ள கச்சேரிகளில் தமிழ்ப் பாடல்கள் அதிகரித்தன.

-வெங்கடேஷ்