சென்னை:  தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரும் ஏப்ரல் மாதம் முதல்வாரத்தில் நீலகிரி மாவட்டத்தில் களஆய்வு மேற்கொள்ள உள்ள நிலையிர், ஏப்ரல்  6ந்தேதி ஊட்டி அரசு மருத்துவக்கல்லூரியின்  கூடுதல் கட்டிடங்களையும் திறந்து வைக்க இருக்கிறார் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

தமிழ்நாட்டில் நீலகிரி மாவட்டத்தில் அரசு மருத்துவ கல்லூரி அமைக்க மத்தியஅரசு கடந்த 2020ம் ஆண்டு அதிமுக ஆட்சியின்போது அனுமதி வழங்கியது. இதையடுத்து 2020ம் ஆண்டு ஜூலை 10ந்தேதி அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி காணொலி காட்சி மூலம், கட்டிட பணிக்கு அடிக்கல் நாட்டினார்.  மேலும், ஊட்டி எச்.பி.எப்.பகுதியில் வனத்துறைக்கு சொந்தமான 25 ஏக்கர் மற்றும் கால்நடை பராமரிப்பு துறைக்கு சொந்தமான 15 ஏக்கர் நிலம் என மொத்தம் 40 ஏக்கரில் ரூ.447.32 கோடி மதிப்பில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை கட்டும் பணிகள் நடந்து வந்தது. இதையடுத்து மாற்று கட்டிடங்களில் அரசு கல்லூரி செயல்பட்டு வந்தது.

இந்த பணிகள் முடிவடைந்த நிலையில்,   தமிழகத்தில் நீலகிரி உள்பட 11 இடங்களில் புதிதாக கட்டப்பட்டுள்ள அரசு மருத்துவ கல்லூரிகளை பிரதமர் மோடி கடந்த 2022ம் ஆண்டு ஜனவரி 12ந்தேதி அன்று மாலை  12 ஜனவரி 2022 டெல்லியில் இருந்து காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

இந்த மருத்துவ கல்லூரியில், மருத்துவமனை வளாகம், மாணவ, மாணவிகள் கல்வி கற்கும் வகையில் மருத்துவ கல்லூரி வளாகம், மருத்துவர்கள் குடியிருப்பு வளாகம் என 3 பிரிவுகளாக பல்வேறு  கட்டப்பட்டுள்ளது.

மருத்துவமனை வளாகம் மட்டும்  19 ஆயிரத்து 757 சதுர மீட்டர் பரப்பளவில் 8 பிரிவுகளாக கட்டப்பட்டுள்ளது. ரூ.447.32 கோடி மதிப்பில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை கட்டும் பணிகள் நடந்து வந்தது.  இதில் தீவிர சிகிச்சை பிரிவு, பிசியோதெரபி, உயர்தர பிணவறை, மருத்துவ கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் மருத்துவர்களுக்கான 1,200 இருக்கைகள் கொண்ட கூட்ட அரங்கமும் அமைக்கப்பட்டுள்ளது.  மேலும்,   108 வாகன கட்டுப்பாட்டு அறை, வாகனம் நிறுத்துமிடம், மருத்துவமனை அலுவலக கட்டிடம், நோயாளிகள் மற்றும் பொதுமக்களுக்கான உணவு அருந்தும் அறை, கழிப்பறையும் அமைந்துள்ளது.

இதுபோக மருத்துவக் கல்லூரி வளாகத்தில் மருத்துவ மாணவ, மாணவிகளுக் கான ஆசிரியர் தொகுதி கட்டிட மும் 3 பிரிவுகளாக 9,438 சதுர மீட்டர் பரப்பளவில் பல்வேறு துறைகளை உள்ளடக்கி கட்டப்பட்டுள்ளது.

இதில் மாணவ,மாணவிகள் கல்வி பயில்வதற்கு தேவையான நூலக கட்டிடம், மருத்துவ கல்லூரி நிர்வாக கட்டிடம் மற்றும் வாகன நிறுத்துமிடம் ஆகிய வசதிகளும், குடியிருப்பு வளாகத்தில் மருத்துவ முதல்வர் குடியிருப்பு, குடிமை மற்றும் துணை குடிமை மருத்துவர் குடியிருப்பு, செவிலியர் விடுதி கட்டிடம், மருத்துவ மாணவ, மாணவிகள் விடுதி என அனைத்து அம்சங்களும் நிறைந்து ஊட்டி அரசு மருத்துவ கல்லூரி கட்டப்பட்டுள்ளது.

இதன் காரணமாக,  மலை மாவட்டமான நீலகிரி மக்கள் உயர்தர மருத்துவ வசதிகளுக்கு கோவை அல்லது கர்நாடகாவின் மைசூரு, கேரளாவின் பத்தேரி உள்ளிட்ட நகரங்களை சார்ந்திருக்க வேண்டிய நிலை தடுக்கப்பட்டது. ஊட்டியில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனையில் அப்பகுதி மக்கள் அனைத்து வகையான சிகிச்சைகளும் பெற்று வருகின்றனர்.

இந்த நிலையில், மருத்துவமனை வளாகத்தில் பொதுமக்களின் வசதிக்காக மேலும் சில கட்டிட பணிகள் கட்டும் பணி நடைபெற்று வந்தது. இந்த கட்டிட பணிகள் முடிவடைந்துள்ளதால், அதை  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  ஏப்ரல் 6-ந் தேதி திறந்துவைக்கிறார்.

முதலமைச்சர் ஸ்டாலினின் மாவட்ட நேரடிய கள பணியானது, கோடையையொட்டி நீலகிரி மாவட்டத்தில் திட்டமிடப்பட்டு உள்ளது. அதனப்டி,  நீலகிரி மாவட்ட பொதுமக்களுக்கு பல்வேறு நலஉதவிகளையும் வழங்கும் வகையிலும், புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டும் வகையில்,  ல் ஏப்ரல் முதல் வாரம் மலை மாவட்டமான நீலகிரி மாவட்டத்தில் ஆய்வுப்பணி மேற்கொள்கிறார்.

அதன்படி,  ஏப்ரல் 5 மற்றும் 6-ந் தேதிகளில் அவர் நீலகிரி மாவட்டத்தில் முகாமிட்டு ஆய்வுப்பணியை மேற்கொள்ள உள்ளார். அப்போது ஊட்டியில் புதிதாக கட்டப்பட்டுள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைக்க உள்ளார்.

இதையொட்டி  இன்று ஊட்டி மருத்துவமனையில்   நேரடி ஆய்வு நடத்திய   அமைச்சர் மா.சுப்பிரமணியன்  பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது,  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணைப்படி தமிழ்நாட்டில் பல்வேறு மருத்துவ கட்டமைப்புகள் மேம்படுத்தப்பட்டும், ஏற்படுத்தப்பட்டும் பொது மக்களின் பயன்பாட்டிற்கு தொடர்ந்து திறந்து வைக்கப்பட்டு வருகிறது.

அதன் ஒருகட்டமாக,  ஊட்டியில் ரூ.143.69 கோடி செலவில் மருத்துவமனை கட்டுமான பணிகள் தொடங்கப்பட்டது. கடந்த 3 ஆண்டுகளாக மாவட்ட நிர்வாகமும், பொதுப்பணித்துறை யினரும் இணைந்து நிலச்சரிவு, மழை உள்ளிட்ட பல்வேறு இடர்பாடுகளுக்கு இடையே இக்கட்டுமான பணிகளை சிறப்பாக கட்டி முடித்துள்ளனர்.

அதன்படி, இந்த மருத்துவமனையில்,   பழங்குடியினருக்கு தனி வார்டு ஒன்று , ஆண்களுக்கு 20 படுக்கைகள், பெண்களுக்கு 20 படுக்கைகள் மற்றும் மகப்பேறுக்கென்று 10 படுக்கைகள் என மொத்தம் 50 படுக்கைகள் கொண்ட வார்டு உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் எம்.ஆர்.ஐ., சி.டி. ஸ்கேன், டிஜிட்டல் எக்ஸ்ரே போன்ற அதிநவீன தொழில்நுட்பத்துடனும், 10 அறுவை சிகிச்சை அரங்கு களுடனும் அமைக்கப்பட்டு  உள்ளது.

இந்த கட்டிடங்களை,  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நீலகிரி மாவட்டத்தில் வருகிற ஏப்ரல் 5 மற்றும் 6-ந்தேதி ஆகிய 2 நாட்கள் சுற்றுப்பயணம் செய்யும்போது திறந்து வைக்கிறார்.  வரும்  6-ந்தேதி அன்று ஊட்டி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்க உள்ளார். அதுமட்டுமல்லாமல் 17 ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் துணை சுகாதார நிலையங்களையும், எமரால்டு அரசு மருத்துவமனையில் ரூ.8.60 கோடி செலவில் தங்கும் அறை, ஆம்புலன்ஸ் நிறுத்துமிடம், தடுப்புச்சுவர், கழிவுநீர் சுத்திகரிப்பான் போன்ற பல்வேறு வசதிகள் கொண்ட கூடுதல் கட்டிடத்தையும் திறந்து வைக்கிறார். அத்துடன்  மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் கூடுதலாக பல்வேறு திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டவும் உள்ளார்.

இவ்வாறு அவர் கூறினார்.