டில்லி:
கரும்பலகையில், மைக்ரோசாப்ட் ஆபீஸ் மென்பொருள் குறித்து, கையால் படம் வரைந்து, மாணவர்களுக்கு ஆசிரியர் ஒருவர் பாடம் நடத்தினார். இதுகுறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.
இதையடுத்து, அந்த ஆசிரியர் உள்பட அந்த பள்ளிக்கு இந்தியாவை சேர்ந்த என்ஐஐடி கம்ப்யூட்டர்கள் பரிசாக வழங்கியது.
மேற்கு ஆப்பரிக்கா கானாவில் உள்ள ஒரு பள்ளியில் ஆசிரியர் ரிச்சார்ட் அபியாக் அகோடோ என்பவர் பணிபுரிந்து வருகிறார். மிகுவும் பின்தங்கிய பகுதியான அந்த பகுதியில் உள்ள பள்ளியில் கணினி கிடையாது.
இதன் காரணமாக ஆசிரியர் அகோடோ, தனது மாணவர்களுக்கு மைக்ரோசாப்ட் மென்பொருளின் எம்எஸ் வேர்டு என்ற அலுவலக மென்பொருள் குறித்து கரும்பலைகையில் படமாக வைத்து, அந்த மென்பொருள் எப்படி செயல்படுகிறது என்பதை விரிவாக விளக்கி பாடம் நடத்தினார்.
இந்த வீடியோசமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இதையடுத்து, இந்திய நிறுவனம் அந்த பள்ளிக்கு 5 கம்ப்யூட்டர்கள் மற்றும் 1 லேப் டாப் வழங்கி உதவியுள்ளது.
இதுகுறித்து கம்ப்யூட்டர்கள் வழங்கிய, என்.ஐ.ஐ.டி-யின் தலைமை மேலாளார் அஷிஷ் குமார், இதுதொடர்பான வீடியோ பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் வைரலாக பரவியதை நாங்கள் பார்த்தோம். அதையடுத்து அந்த பள்ளிக்கு உதவ முன்வந்தோம்.
இந்த விஷயத்தில், பள்ளி மாணவர்களுக்கு பாடம் நடத்திய ஆசிரியரின் அர்ப்பணிப்பை பார்த்து மிகவும் மகிழ்ந்தோம் என்ற அவர், ஒரு ஐ.டி. பயிற்சி நிறுவனமாக நாங்கள் பள்ளிக்கு உதவியை செய்ய முடிவு செய்து, உதவிகளை வழங்கினோம் என்றும் கூறினார்.