திருவனந்தபுரம்:
கேரளாவில் வவ்வால்கள் மூலம் பரவும் நோயின் காரணமாக கடந்த 15 நாட்களில் 15 பேர் பலியாகி இருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
கேரள மாநிலத்தில் கடந்த சில வாரங்களாக ‘நிபா’ எனும் அரிய வகை வைரஸ் மக்களை மிரட்டி வருகிறது. இந்த வைரஸ் தாக்குதலுக்கு ஆளானவர்கள் மூளைக்காய்ச்சல் ஏற்பட்டு மரணத்தை தழுவி வருகிறார்கள்.
இந்த நிபா வைரஸ் வவ்வால்கள் மூலம் பரவும் ஒருவகை வைரஸ். இந்த வைரஸ் உயிருக்கே ஆபத்தை விளைவிக்கக்கூடிய கொடிய வைரஸ் என்று கூறப்படுகிறது.
இந்த வைரஸ் தாக்குதல்கள் தற்போது கேரளாவின் கோழிக்கோடு மற்றும் மலப்புரம் பகுதிகளில் பரவி வருவதாக கூறப்படுகிறது. மேலும் காய்ச்சல் காரணமாக 25க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்த அரிய வகை நோயின் தாக்குதலுக்கு ஒரு நர்ஸ் உள்பட இதுவரை 15 பேர் உயிரிழந்துள்ள அதிர்ச்சி தகவல்களும் வெளியாகி உள்ளது.
ஆனால், தீவிர காய்ச்சலால் 9 பேர் மட்டுமே பலியாகி உள்ளனர், இவர்களில் 2 பேர் மட்டுமே நிபா வைரஸ் தாக்குதலில் இறந்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது. கேரள மாநிலஅரசு இந்த வைரஸ் நோய் பரவாமல் இருக்க போர்க்கால நடவடிக்கை எடுத்து வருவதாகவும், உயிரிழந்தவர்களின் ரத்த மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டு உள்ளதாகவும், இதனை தடுக்க பணி குழு ஒன்று அமைக்கப்பட்டு கோழிக்கோடு மாவட்ட ஆட்சியர் ஜோஸ் கூறி உள்ளார்.