அண்ணா பல்கலைக்கழக மாணவியின் பாலியல் வன்கொடுமை தொடர்பான எஃப்.ஐ.ஆர் கசிந்தது எப்படி என தேசிய தகவல் மையம் தரப்பில் இருந்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மற்றும் போக்சோ சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்படும் குற்றங்களை CCTNS என்ற குற்றப்பதிவு இணையதளத்தில் பதிவு செய்யப்பட வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தேசிய குற்றப்பதிவுப் பணியகத்தால் (NCRB) நிர்வகிக்கப்படும் இந்த CCTNS இணையதளத்தை அந்தந்த மாநில குற்றப்பதிவுப் பணியகம் (SCRB) செயல்படுத்தி வருகிறது.

இந்த நிலையில், அண்ணா பல்கலை மாணவி அளித்த புகாரை BNS சட்டத்தின் பிரிவுகளான 64, 67, 68, 70, 79 ஆகிய பிரிவுகளின் கீழ் பதிவு செய்தனர்.
இந்த பிரிவுகள் அனைத்தும் பெண்கள் வன்கொடுமை தொடர்பானவை என்றும், இந்த பிரிவுகளில் ஒரு எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யும் பட்சத்தில், புகாரளிப்பவர் மட்டுமே அந்த எஃப்.ஐ.ஆரை பார்க்க முடியும் என்றும் கூறப்படுகிறது.
இந்நிலையில், மாணவியின் அடையாளத்தை வெளிப்படுத்தும் விதமாக எஃப்.ஐ.ஆர் நகல் வெளியானது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதையடுத்து, பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவரின் தகவலை வெளிப்படுத்துவது சட்டப்படி குற்றம் என்ற நிலையில், எஃப்.ஐ.ஆர் நகலை சமூக வலைதளங்களில் பரப்புபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை எச்சரித்தது.
மேலும், இந்த எஃப்.ஐ.ஆர் CCTNS இணையதளத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாகவோ அல்லது புகார் அளித்தவர் மூலமாகவோ கசிந்திருக்க வாய்ப்பு இருப்பதாக சென்னை மாநகர காவல்துறை ஆணையர் தெரிவித்திருந்தார்.
தவிர, CCTNS இணையதளத்தில் இருந்து எஃப்.ஐ.ஆர்-ஐ பதிவிறக்கம் செய்த 14 பேர் மீது இது தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறியிருந்தார்.
இந்த விவகாரம் சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ள நிலையில் எஃப்.ஐ.ஆர் கசிவுக்கு CCTNS இணையதளத்தில் தொழில்நுட்ப கோளாறு தான் காரணம் என்று மத்திய அரசின் கீழ் உள்ள தேசிய தகவல் மையம் இன்று உறுதிப்படுத்தியுள்ளது.
இதுதொடர்பாக இணையதளத்தில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து மாநில குற்றப்பதிவுப் பணியகத்திற்கு (SCRB) NIC அறிவுறுத்தியுள்ளது.
இந்த நிலையில், CCTNS இணையதளத்தில் இருந்து FIR-ஐ பதிவிறக்கம் செய்து வெளியிட்ட 14 பேரின் தகவலை காவல்துறை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.