சென்னை: தமிழ்நாட்டில் சென்னை, தஞ்சை உள்பட 12 இடங்களில் என்ஐஏ சோதனை நடத்தப்பட்டு இதையடுத்து, தஞ்சாவூரில்  2 பேர் கைது செய்யப்பட்ட உள்ளனர்.

தமிழ்நாட்டில் தடை செய்யப்பட்ட இஸ்லாமிய அமைப்புகளுடன் பலர் தொடர்பு கொள்வது அதிகரித்து வருகிறது. இதுதொடர்பாக ஏற்கனவே என்ஐஏ பலமுறை சோதனை நடத்தி சிலரை கைது செய்துள்ள நிலையில், நேற்று ( 30/06/24)  அன்று சென்னை, திருச்சி, கும்பகோணம், தஞ்சாவூர், புதுக்கோட்டை , ஈரோடு உள்பட பல இடங்களில் சோதனை நடத்தப்பட்டது.

தஞ்சாவூரில் 5 இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை தஞ்சாவூர் மாவட்டத்தில் தேசிய புலனாய்வு அமைப்பினர் (என்.ஐ.ஏ.) திடீர் சோதனை நடத்தினர். அதுபோல , ஈரோட்டில் தந்தை, மகன் என இருவர் வீட்டில் என்ஐஏ அதிகாரிகள் இன்று சோதனை மேற்கொண்டனர். இதைத்தொடர்ந்து,  தஞ்சை மாவட்டத்தில்  இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

புதுக்கோட்டை மாத்தூரில் உள்ள அப்துல்கான் என்பவருக்கு சொந்தமான இடத்தில் அதிகாலையில் இருந்தே சோதனை நடைபெற்றது.

தடை செய்யப்பட்ட இஸ்லாமிய பயங்கரவாத அமைப்பான, ஹிஸ்புத் தாஹீர் என்ற அமைப்பின் கருத்துக்களைப் பரப்பும் வகையிலும், இளைஞர்களை மூளைச்சலவை செய்து தீவிரவாத அமைப்பில் ஆட்கள் சேர்க்கும் முயற்சியிலும் ஈடுபட்டு வருவதாக வந்த தகவலின் அடிப்படையில் இந்த சோதனை நடைபெற்று வருவதாக தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் ஒரு இடம் உட்பட மொத்தம் 12 இடங்களில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது. தடை செய்யப்பட்ட அமைப்புக்கு ஆதரவாக செயல்பட்டவர்கள், அவர்களுடன் தொடர்பில் இருந்த நபர்கள் உள்ளிட்டோரின் இடங்களில் என இந்த சோதனை நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதன் தொடர்ச்சியாக, தாம்பரம் அடுத்த பீர்க்கங்கரணை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட முடிச்சூர் இபி காலனி பகுதியைச் சேர்ந்த கபீர் அகமது (40) என்பவரது வீட்டில் தேசிய புலனாய்வு முகமை டிஎஸ்பி குமரன் தலைமையில் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.  கபீர் அகமது, ஹிஸ்புத் தஹ்ரீர் என்ற அமைப்பைச் சேர்ந்தவர் என்பதும் தெரியவந்துள்ளது. தொடர்ந்து அதிகாரிகள் அவரிடம் விசாரணை நடத்தினர்.

தஞ்சை மாவட்டம்  சாலியமங்கலத்தை சேர்ந்த முஜிபுர் ரகுமான் மற்றும் அப்துல் ரகுமான் என்ற இருவர் கைது செய்யப்பட்டு விசாரணை மேற்கொண்டனர். இதையடுத்து அங்கு இரண்டு பேரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட இருவர் மீது உபா சட்டத்தின் கீழ் என்ஐஏ அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 153பி, 121ஏ, 120 பி உள்ளிட்ட பிரிவுகளில் என்ஐஏ அதிகாரிகள் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும் சோதனைக்குப் பிறகு எந்த மாதிரியான ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது, அதில் வேறு யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது என்பன குறித்து தெரியவரும் எனவும் தெரிவித்துள்ளார்.

பறிமுதல் செய்யப்பட்ட அந்த ஆவணங்களின் அடிப்படையில் அடுத்தக்கட்ட சோதனை மற்றும் நடவடிக்கை இருக்கும் எனவும் அதிகாரிகள் தரப்பில் தெரிவித்துள்ளனர்.