சென்னை:
மதமாற்றி திருமணம் செய்த மனைவியை பயங்கரவாத அமைப்புக்கு பாலியல் அடிமையாக ஒப்படைத்த புகாரில் வாலிபரை என்ஐஏ அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
கேரளா மாநிலம் கன்னூரைச் சேர்ந்தவர் ரியாஸ் (வயது 23). இவர் அதே பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணை கட்டாய மதமாற்றம் செய்து திருமணம் செய்து கொண்டதாக அப்பெண் புகார் செய்தார். மேலும், தன்னை சவுதி அரேபியாவுக்கு அழைத்துச் சென்று ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்பிடம் பாலியல் அடிமையாக ஒப்படைக்க முயற்சித்தாகவும், இது குறித்து தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) விசாரணை நடத்த வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் அந்த பெண் முறையிட்டார்.
இதன் அடிப்படையில் என்ஐஏ விசாரணை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் சவுதி அரேபியாவின் ஜெத்தா நகரில் இருந்து கொழும்பு வழியாக ரியாஸ் சென்னை விமானநிலையம் வந்தார். இவருக்கு ஏற்கனவே கேரளா போலீசார் லுக் அவுட் நோட்டீஸ் வழங்கியிருந்தனர்.
ரியாஸ் சென்னை வருவதை அறிந்த போலீசாரும், என்ஐஏ அதிகாரிகளும் விமானநிலையத்தில் வைத்து ரியாஸை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்த வழக்கில் மொத்தம் 11 பேர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த குற்றச்சாட்டுக்களை ரியாஸ் மறுத்துள்ளார். அதோடு அவர் எத்தகைய விசாரணைக்கும் தயாராக இருப்பதாக தெரவித்துள்ளார்.