தேசிய மனித உரிமைகள் ஆணைய தலைவராக உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி வி.ராமசுப்பிரமணியன் நியமிக்கப்படுவதாக நேற்று அறிவிப்பு வெளியானது.

இந்த தேர்வு முன் தீர்மானிக்கப்பட்ட ஒன்று என்றும் இதில் அடிப்படை கோளாறு உள்ளதாகவும் எதிர்க்கட்சி தலைவர் கார்கே மற்றும் ராகுல் காந்தி ஆகியோர் குற்றம்சாட்டியுள்ளனர்.

முன்னதாக தேசிய மனித உரிமைகள் ஆணைய தலைவரை தேர்வு செய்வதற்காக டிசம்பர் 18ம் தேதி நடைபெற்ற தேர்வு குழு கூட்டத்தில் மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மற்றும் மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஆகியோர் வேறு பெயர்களை பரிந்துரைத்தனர்.

NHRC தலைவர் பதவிக்கு நீதிபதி ரோஹிண்டன் நாரிமன் மற்றும் நீதிபதி கே.எம்.ஜோசப் ஆகியோரை ராகுல் காந்தி மற்றும் கார்கே பரிந்துரைத்தனர்.

NHRC உறுப்பினர்களாக நீதிபதி முரளிதர் மற்றும் நீதிபதி அகில் குரேஷி ஆகியோர் பெயரை பரிந்துரைத்தனர்.

ஆனால் இந்த கூட்டத்தில் தங்களது கருத்துக்கள் ஏற்கப்படவில்லை என்றும் மாநிலங்கள், சாதி, சமூகம் மற்றும் மத ரீதியாக அனைவருக்கும் சமவாய்ப்பு வழங்கவேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டதாக அவர்கள் கூறியுள்ளனர்.

டிசம்பர் 18 அன்று பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற இந்த தேர்வுக் குழுக் கூட்டத்தில் பெரும்பான்மையாக இருக்கக்கூடிய ஆளும்கட்சி உறுப்பினர்கள் தங்கள் பரிந்துரைகளை நிராகரிக்கும் அணுகுமுறையுடன் செயல்பட்டதாகவும் இது வருந்தத்தக்கது மட்டுமன்றி கண்டிக்கப்பட வேண்டிய செயல் என்றும் கார்கே மற்றும் ராகுல் காந்தி கூட்டாக தெரிவித்துள்ளனர்.

தவிர, இந்த தேர்வு குழு கூட்டம் ‘அடிப்படையில் குறைபாடு’ நிறைந்ததாக இருந்தது என்றும் ஏற்கனவே தீர்மானிக்கப்பட்ட முடிவை ஆமோதிக்கவே இந்த கூட்டம் நடத்தப்பட்டதாவும் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் குறித்த தகுதிகளை ஆலோசிக்க இந்த கூட்டம் கூட்டப்படவில்லை என்றும் அவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.