சென்னை: கட்டுமான நிதியளிப்பு நிறுவனங்களில், கட்டுமானத் திட்டங்களுக்காக கடன் வாங்கிவிட்டு ஏமாற்றும் கட்டுமான நிறுவனங்களுக்கு கிடுக்கிப்பிடி போடும் வகையில், புதிய விதிமுறைகளை வகுத்துள்ளது தேசிய கட்டுமான வங்கி(NHB).
இதுதொடர்பாக கூறப்படுவதாவது; கட்டுமானத் திட்டங்களுக்காக கட்டுமான நிதியளிப்பு நிறுவனங்களிடமிருந்து பெரும் தொகையை கடனாகப் பெறும் கட்டுமான நிறுவனங்கள் பல, பின்னர் பல்வேறு காரணங்களைக் கூறி கடனை முறையாக திரும்ப செலுத்துவதில்லை.
எனவே, தொடக்கத்திலேயே பெரிய தொகைகளை கடனாக கொடுக்காமல், சிறிய தொகையை மட்டுமே ஆரம்பத்தில் வழங்கி, பின்னர் ஒவ்வொரு கட்டமாக நிதியை அளிக்குமாறு, கட்டுமான நிதியளிப்பு நிறுவனங்களுக்கு, என்எச்பி அறிவுறுத்தியுள்ளது.
மேலும், கட்டுமானத் திட்டங்களை தொடர்ச்சியாக கண்காணிக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. சமீபகாலங்களில், கட்டுமான நிதியளிப்பு நிறுவனங்களுக்கான ஒழுங்குமுறை அமைப்பு, கட்டுமான கடன்கள் தொடர்பாக நிறைய புகார்களை பெற்றது. இதனடிப்படையில்தான், மேற்கண்ட புதிய விதிமுறை கொண்டுவரப்பட்டுள்ளது.