டெல்லி: 2025ம் நிதியாண்டில் தேசிய நெடுஞ்சாலைத்துறை இலக்கை மிஞ்சி சாதனை படைத்துள்ளதாக மத்தியஅரசு தெரிவித்து உள்ளது. அதன்படி,  2025 நிதியாண்டில் இந்தியா முழுவதும் 5,614 கி.மீ நீள தேசிய நெடுஞ்சாலைகளை அமைத்து இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் புதிய சாதனை படைத்துள்ளது.

2025 நிதியாண்டில் NHAI சாதனை அளவில் 5,614 கி.மீ நெடுஞ்சாலைகளை அமைத்துள்ளது 2024-25 நிதியாண்டில் நெடுஞ்சாலை மேம்பாட்டிற்கான மொத்த செலவு ரூ.2,50,000 கோடியை (தற்காலிகமாக) எட்டியுள்ளது, இது ரூ.2,40,000 கோடி இலக்கை தாண்டியுள்ளது.

நாட்டின் முதுகெலும்பாக திகழ்வது  தேசிய நெடுஞ்சாலைகள். இந்த தேசிய நெடுஞ்சாலைகள் நாட்டின் அனைத்து முக்கிய நகரங்களையும், மாநிலங்களின் துறைமுகங்களையும் இணைக்கின்றன. இந்திய தேசிய நெடுஞ்சாலையின் மொத்த நீளம் 132500 கிமீ ஆகும், இது நாட்டின் மொத்த சாலை நீளத்தில் 2% ஆகும். நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு தேசிய நெடுஞ்சாலைகள் முக்கிய பங்காற்றி வருகினற்ன. இதனால்,  இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை தேசிய நெடுஞ்சாலைகளை அமைத்துள்ளது. மேலும் பல பகுதிகளில் தேசிய நெடுஞ்சாலைகளை அமைத்து வருகின்றன.

இந்த நிலையில், இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) மார்ச் 31 ஆம் தேதியுடன் முடிவடைந்த கடந்த நிதியாண்டில் 5,614 கி.மீ நீள தேசிய நெடுஞ்சாலைகளை அமைத்துள்ளதாக தெரிவித்துள்ளது.  2025 நிதியாண்டில் 5,150 கி.மீ நீள தேசிய நெடுஞ்சாலைகளை அமைக்க திட்டமிட்டிருந்த நிலையில், அந்த இலக்கை விட அதிக கீமீ சாலைகளை அமைத்து சாதனை படைத்துள்ளது.

அத்துடன்,  தேசிய நெடுஞ்சாலை உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்கான 2024-25 நிதியாண்டில் அதன் மூலதனச் செலவு ரூ.240,000 கோடி இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இருந்த நிலையில், இப்போது வரை செலவு ரூ.250,000 கோடிக்கும் அதிகமாக உயர்ந்துள்ளதாக தேசிய நெடூஞ்சாலைத்துறை வெளியிட்டுள்ள  அறிக்கையில் தெரிவித்துள்ளது.

மேலும்,   கடந்த நிதியாண்டில் ஒட்டுமொத்த மூலதனச் செலவு 2023-24 நிதியாண்டில் 207,000 கோடியுடன் ஒப்பிடும்போது சுமார் 21 சதவீதம் அதிகரித்துள்ளது என்றும், 2022-23 நிதியாண்டில் 173,000 கோடியுடன் ஒப்பிடும்போது சுமார் 45 சதவீதம் அதிகரித்துள்ளது என்றும் கூறியுள்ளது. நெடுஞ்சாலைகளை மேம்படுத்த தேவையான நிதியை திரட்ட சுங்கச்சாவடி பரிமாற்றம் (TOT), உள்கட்டமைப்பு முதலீட்டு அறக்கட்டளை (InvIT) மற்றும் சுங்கப் பத்திரமயமாக்கல் போன்ற வழிமுறைகளை பயன்படுத்தி இருப்பதாக இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் கூறியுள்ளது.

நாடு முழுவதும் உள்ள நெடுஞ்சாலைப் பிரிவுகளில் NHAI சராசரியாக நான்கு முதல் ஐந்து சதவீதம் வரை சுங்கக் கட்டணங்களை உயர்த்தியுள்ளது. இது ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.