புதுச்சேரி: அடுத்த முறை புதுச்சேரிக்கு வரும்போது, மீனவர்களுடன் கடலுக்கு சென்று மீன் பிடிப்பது எப்படி என்பதை பார்ப்பேன் என மீனவர்களுடன் கலந்துரையாடல் நடத்திய ராகுல் காந்தி கூறினார்.
புதுச்சேரியில் நிலவி வரும் பரபரப்பான அரசியல் சூழ்நிலைக்கு இடையே காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி இன்று தனி விமானம் மூலம் புதுச்சேரிக்கு வந்துள்ளார். அவரை, மாநில முதல்வர் நாராயணசாமி, காங்கிரஸ் தலைவர் ஏ.வி.சுப்ரமணியன், வைத்திலிங்கம் எம்.பி. மற்றும் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் ராகுல்காந்தியை வரவேற்றனர்.
அதைத்தொடர்ந்து திட்டமிட்டபடி, மீனவ பெண்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சி சோலை நகரில் உள்ள அங்குள்ள தென்னந்தோப்பில் நடைபெற்றது. மீனவர்கள், மீனவ சமுதாய பெண்களை சந்தித்து, கலந்துரையாடினார். அப்போது, ராகுலை, காங்கிரஸ் எம்எல்ஏ விஜயவேணி முத்தமிட்டு வரவேற்றார். பின்னர், முதல்வர் நாராயணசாமி முன்னிலையில் ராகுல் கலந்துரையாடலை தொடங்கினார். அப்போது பலர் முதல்வர் மீது குற்றம் சாட்டினர், நிவர் புயலின்போது, தாங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டதாவும், ஆனால், காங்கிரஸ் அரசு தங்களை கண்டுகொள்ளவில்லை என மீனவ பெண்கள் குற்றம்சாட்டினர். தன் மீதான புகார்களை, வருத்தங்களை, நாராயணசாமியே, ராகுலுக்கு மொழிபெயர்த்தார்.
அதைத்தொடர்ந்து மீனவர்களிடையே பேசிய ராகுல்காந்தி, தாம் அடுத்தமுறை புதுச்சேரி வரும்போது, தன்னை படகில், கடலுக்கு அழைத்துச் செல்லுமாறு, மீனவர்களிடம், ராகுல் காந்தி கோரிக்கை விடுத்தார். தான் கடலுக்குள் சென்று நீங்கள் மீன் பிடிப்பதை பார்க்க வேண்டும் என்றும் கூறினார்.
ராகுலின் கலந்துரையாடல் மீனவ மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.
அதைத்தொடர்ந்து பாரதிதாசன் மகளிர் கல்லூரி மாணவிகளுடன் கலந்துரையாடினார். இந்த கலந்துரையாடல் நிகழ்ச்சி கம்பன் கலையரங்கில் நடைபெற்றது. அதன்பின் அக்கார்டு ஓட்டலுக்கு சென்று மதிய உணவு சாப்பிட்டு விட்டு சிறிது நேரம் ஓய்வுவெடுத்த ராகுல்காந்தி மாலையில் அங்கு நடக்கும் பொதுக்கூட்டத்தில் பேசுகிறார். அதன்பின் விமான நிலையம் சென்று அங்கிருந்து டெல்லி செல்கிறார்