டில்லி:
முதுகலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வை ரத்து செய்து விட்டு, அதற்கு பதிலாக நெக்ஸ்ட் (National Exit Test) எனப்படும் புதிய தகுதி தேர்வை அமல்படுத்த உள்ளதாக மத்திய அறிவித்து உள்ளது. அதையடத்து, நெக்ஸ்ட் தகுதித் தேர்வை கட்டாயமாக்கும் தேசிய மருத்துவ ஆணையம் மசோதாவிற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதன் காரணமாக இந்த மசோதா விரைவில் நாடாளுமன்ற அவைகளில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்படும்.
இளநிலை மருத்துவ படிப்புக்கு தகுதித் தேர்வாக நாடு முழுவதும் நீட் தேர்வு எழுதுவது போல, முதுநிலை மருத்துவப் படிப்புக்கு நெக்ஸ்ட் எனப்படும் தகுதித்தேர்வை கொண்டு வர மத்திய அரசு முனைப்பு காட்டி உள்ளது. இந்த தகுதித் தேர்வை கட்டாயமாக்கும் தேசிய மருத்துவ ஆணையம் மசோதாவிற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
மருத்துவ கல்வியில் ஏராளமான சீர்திருத்தங்களுக்கு வழிவகுக்கும் தேசிய மருத்துவ ஆணைய மசோதா, கடந்த 2017-ம் ஆண்டு பாராளுமன்ற மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. நிலைக் குழு ஆய்வுக்கு பிறகு சில திருத்தங்களும் செய்யப்பட்டன. ஆனால், மக்களவை கலைக்கப் பட்டதால், அந்த மசோதா காலாவதி ஆகிவிட்டது.இந்நிலையில், புதிய மக்களவையின் முதல் கூட்டத்தொடரிலேயே, தேசிய மருத்துவ ஆணைய மசோதாவை மீண்டும் தாக்கல் செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
இந்த மசோதாவில், மருத்துவ கல்வியை ஒழுங்குபடுத்தும் இந்திய மருத்துவ கவுன்சிலுக்கு பதிலாக, தேசிய மருத்துவ ஆணையம் அமைப்பது உள்ளிட்ட சீர்திருத்தங்கள், இந்த மசோதாவில் கூறப்பட்டுள்ளன.
எம்பிபிஎஸ் படிப்பின் இறுதி தேர்வு, நெக்ஸ்ட் (நேஷனல் எக்சிட் டெஸ்ட்) என்ற பெயரில் பொதுத் தேர்வாக நடத்தவும் இந்த மசோதாவில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.இந்த தேர்வில் பெறும் மதிப்பெண்களை கொண்டே முதுநிலை மருத்துவ படிப்பில் சேரலாம், முதுநிலை மருத்துவ படிப்புக்கு நீட் தேர்வு கிடையாது.
இதன் மூலம் எம்.பி.பி.எஸ் முடித்தவர்கள் சிகிச்சை அளிப்பதற்கான லைசென்ஸ் பெற தனி தேர்வு எழுத தேவையில்லை. வெளிநாட்டில் மருத்துவ படிப்பு முடித்தவர்களும் இந்த நெக்ஸ்ட் தேர்வை எழுதி இந்தியாவில் சிகிச்சை அளிக்க லைசென்ஸ் பெறலாம்.
இந்த வரைவு மசோதாவை நடப்பு நாடாளுமன்றக் கூட்டத் தொடரிலேயே தாக்கல் செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.