ஆக்லாந்து: நியூசிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டி-20 போட்டியில், முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி, 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து வெறும் 132 ரன்களை மட்டுமே எடுத்துள்ளது.
டாஸ் வென்ற நியூசிலாந்து அணி, முதலில் பேட்டிங்கை தேர்வுசெய்தது. எனவே, கடந்தமுறை போலவே, சிறிய ஆக்லாந்து மைதானத்தில் பெரிய ஸ்கோரை எட்ட முயலும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், தொடக்கத்தில்தான் அந்த அணி சற்று வேகம் காட்டியதே தவிர, பின்னர் அப்படியே சரண்டர் ஆகிவிட்டது. ஏனெனில், இந்திய பவுலிங் அப்படி!
சுழற்பந்து மற்றும் வேகம் இரண்டிலும் இந்திய பவுலர்கள் பின்னியெடுத்தனர் எனலாம். 4 ஓவர்களை வீசிய ஷமி, விக்கெட் எடுக்காமல் 21 ரன்களை மட்டுமே கொடுத்தார்.
4 ஓவர்கள் வீசிய ஜடேஜா, 18 ரன்கள் மட்டுமே கொடுத்து, 2 விக்கெட்டுகள் எடுத்தார். 2 ஓவர் வீசிய ஷிவம் துபே 16 ரன்கள் கொடுத்து 1 விக்கெட் சாய்த்தார். 4 ஓவர்கள் வீசிய பும்ரா, 21 ரன்கள் கொடுத்து 1 விக்கெட் வீழ்த்தினார்.
நியூசிலாந்திற்காக துவக்க வீரர் மார்ட்டின் குப்தில் மட்டுமே 20 பந்துகளில் 33 ரன்களை அடித்தார். மற்றபடி, கடந்தப் போட்டியில் அரைசதம் அடித்த கேப்டன் வில்லியம்சன் மற்றும் ராஸ் டெய்லர் போன்றோர் இந்தமுறை ஜொலிக்கவில்லை.
டிம் செய்ஃபர்ட் 26 பந்துகளில் 33 ரன்களை அடித்து கைகொடுத்தார். முடிவில், அந்த அணியால் 20 ஓவர்களில் 132 ரன்கள் மட்டுமே சேர்க்க முடிந்தது.