ஜுலை 3ம் தேதி வரையிலான நிலவரப்படி, தரவரிசைப் பட்டியிலில் 14 புள்ளிகளைப் பெற்று ஆஸ்திரேலியா முதலிடத்திலும் , 13 புள்ளிகளுடன் இந்திய இரண்டாமிடத்திலும் உள்ளன.

சில நாட்களுக்கு முன்னர் வாழ்வா? சாவா? போராட்டத்திலிருந்த இங்கிலாந்து அணி, தற்போது 12 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தைப் பெற்றுள்ளதோடு, அரையிறுதி வாய்ப்பையும் உறுதிசெய்துவிட்டது.

மூன்றாவது இடத்திலிருந்த நியூசிலாந்து அணி 11 புள்ளிகளுடன் நான்காவது இடத்திற்கு போய்விட்டது. பாகிஸ்தான் அணி 9 புள்ளிகளுடன் ஐந்தாவது இடத்தில் உள்ளது. வங்கதேச அணியுடனான போட்டியை பாகிஸ்தான் பெரிய ரன் வித்தியாசத்தில் வென்றால், நியூசிலாந்தை பின்னுக்குத் தள்ளி 11 புள்ளிகளுடன் அரையிறுதிக்கு தகுதி பெறலாம். ஆனால், அது அவ்வளவு எளிதான காரியமல்ல.

இலங்கை அணி 8 புள்ளிகளுடன் ஆறாவது இடத்திலும், வங்கதேசம் 7 புள்ளிகளுடன் ஏழாவது இடத்திலும் உள்ளன. தென்னாப்பிரிக்க அணி 5 புள்ளிகளுடன் எட்டாவது இடத்தில் உள்ளது.

மேற்கிந்திய தீவுகள் அணி 3 புள்ளிகளுடன் ஒன்பதாவது இடத்தில் உள்ளது. அதேசமயம், ஆஃப்கானிஸ்தான் அணி புள்ளிகள் எதையும் பெறாமல், 10வது இடத்தை கெட்டியாகப் பிடித்துக்கொண்டு அமர்ந்துள்ளது.