விக்டோரியா
நியுஜிலாந்தில் செமி ஆட்டோமேட்டிக் துப்பாக்கிகள் உள்ளிட்ட அனைத்து தாக்குதல் துப்பாக்கிகள் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை அன்று நியுஜிலாந்து நாட்டில் உள்ள கிறிஸ்ட் சர்ச் நகரில் இரு மசூதிகளில் துப்பாக்கி சூடு நடந்தது. அதில் சுமார் 50க்கும் மேற்பட்டவர்கள் மரணம் அடைந்தனர். இந்த தாக்குதலை நடத்திய ஆஸ்திரேலிய இளைஞர் கைது செய்யப்பட்டார். அவரிடம் விசாரணை செய்ததில் தாக்குதலில் ஈடுபடுத்தப்பட்ட துப்பாக்கிகள் நியுஜிலாந்தில் வாங்கப்பட்டுள்ளது தெரிய வந்தது. அது மட்டுமின்றி அவரிடம் மேலும் துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டன.
இந்த தகவல் அறிந்த நியுஜிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டர்ன் துப்பாக்கி வைத்திருக்கும் உரிமம் வழங்க விதிகள் கடுமையாக்கப்படும் என அறிவித்தார். இந்நிலையில் நியுஜிலாந்து அரசு இன்று முதல் செமி ஆட்டோமேடிக் உள்ளிட அனைத்து தாக்குதல் துப்பாக்கிகள் விற்பனைக்கு தடை விதித்துள்ளது. இது குறித்து நியுஜிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டர்ன் மக்களுக்கு அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
அந்த அறிவிப்பில் ஜெசிந்தா, ”இன்று முதல் நியுஜிலாந்தில் ராணுவத்தில் உபயோகிக்கப்படும் செமி ஆட்டோமேடிக் உள்ளிட்ட அனைத்து தாக்குதல் துப்பாக்கிகளும் தடை செய்யப்படுகிறது. இனி அனுமதி இல்லாமல் எவ்வகை துப்பாக்கியும் விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் அனுமதி அளிப்பதும் முழுமையாக நிறுத்தப்படுகிறது. எனவே துப்பாக்கிகள் இனி நாட்டில் விற்கப்பட மாட்டாது.
அது மட்டுமின்றி வெடிகுண்டுக்கு சமமான துப்பாக்கி குண்டுகளும் தடை செய்யப்பட்டுள்ளன. மொத்தத்தில் தீவிரவாதிகள் உபயோகிக்கும் அனைத்து ஆயுதங்களுக்கும் அரசு தடை விதித்துள்ளது. இந்த தடை உத்தரவு உடனடியாக அமுலுக்கு வருவதால் குடிமக்கள் அதை பின்பற்றி எங்களுக்கு உதவுவார்கள் என நான் நம்புகிறேன்.
ஏற்கனவே பொதுமக்கள் வைத்துள்ள துப்பாக்கிகளை திரும்ப அளித்து விட வேண்டும். அப்படி திரும்ப அளிப்போருக்கு ஊக்கத் தொகை அளிக்க உள்ளோம். இதற்கான கெடு விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. அந்த கெடுவை தாண்டியும் துப்பாக்கிகள் வைத்திருப்போருக்கு $4,000 அபராதம் மற்றும் மூன்று வருட சிறை தண்டனை வழங்கப்படும்” என தெரிவித்துள்ளார்.