பெங்களூரு
மூத்த பத்திரிகையாளரான சத்யநாராயண ஐயர், தனது ஆரம்ப கால எழுத்துக்கள் பிரசுரிக்கப்படாமல் நிராகரிக்கப் பட்டதால் தனது பெயரை ஆங்கிலத்தில் ரிக்ரெட் ஐயர் என மாற்றி வைத்துக் கொண்டு புகழ் பெற்றுள்ளார்.
பெங்களூருவில் வசிக்கும் சுமார் 67 வயதான சத்யநாராயண ஐயருக்கு பன் முகங்கள் உண்டு, ஆம். அவருக்கு எழுத்தாளர், பதிப்பாளர், புகைப்படக் கலைஞர், பத்திரிகையாளர், கேலிச்சித்திரக் கலைஞர் உள்ளிட்ட பல முகங்கள் உள்ளன. இவரைப்பற்றி இப்போது பார்ப்போம். இவர் 70 களில் கல்லூரி மாணவராக இருக்கும் போது எழுத ஆரம்பித்துள்ளார். இவருடைய முதல் கட்டுரையான “நான் யார்” இவருடைய கல்லூரி பத்திரிகையில் வெளிவந்து இவருக்கு புகழைத் தேடித் தந்தது.
அது முதல் அவர் தனது எழுத்துக்களை பத்திரிகைகளுக்கு அனுப்பத் தொடங்கினார். முதலில் ஒரு கட்டுரையை அவர் கன்னட பத்திரிகையான ஜனவாணி பத்திரிகைக்கு அனுப்பினார். அந்த கட்டுரை பிரசுரிக்கப்படாமல் வருத்தக் கடிதத்துடன் (REGRET LETTER) திரும்பி வந்தது. ஆயினும் விடாமல் பல கட்டுரைகளையும், செய்திகளையும், கேலிச்சித்திரங்களையும் இவர் தொடர்ந்து அனுப்பி வந்தார். அவற்றில் பெரும்பாலானவை பிரசுரிக்கப்படாமல் திரும்பி வந்துள்ளன.
அதனால் அவர் தனது பெயரான சத்யநாராயணா ஐயர் என்பதை ரிக்ரெட் ஐயர் என மாற்றிக் கொண்டுள்ளார். அவரது திறமையை புரிந்துக் கொண்ட பத்திரிகைகள் அவரை அங்கீகரித்து எழுத்துத் துறையில் பிரவேசிக்க வைத்தன. இப்போது கன்னட பத்திரிகை உலகில் பிரபலமாக விளங்கும் இவர் தனது ரிக்ரெட் ஐயர் என்னும் பெயரை மாற்றிக்கொள்ளவில்லை.
இவரது புதுமையான புனைப் பெயர் பத்திரிகை உலகில் பரவத் தொடங்கியது. தனது பெயரை மாற்றிக் கொள்ள எப்போதுமே விரும்பயதில்லை என தெரிவிக்கும் ரிக்ரெட் ஐயர் தனக்கு வந்துள்ள நிராகரிப்பு கடிதங்கள் அனைத்தையும் ஒரு கோப்பில் சேர்த்து வைத்துக் கொண்டுள்ளார். அத்துடன் இதே பெயரில் அவர் ஒரு பாஸ்போர்ட் எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.