ஆக்லாந்து: நியூசிலாந்தில் 3 மாதங்களுக்கு பிறகு ஒருவர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளார்.
உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலாகி இருக்கும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த அனைத்து நாடுகளும் போராடி வருகின்றன. இன்னமும் இதற்கு தடுப்பூசிகள் அறிமுகப்படுத்தவில்லை.
கொரோனா கட்டுப்படுத்தலில் வெற்றிகரமாக காணப்பட்ட நாடுகளில் நியூசிலாந்தும் ஒன்றாகும். பின்னர், ஜூனில் ஊரடங்கு கட்டுப்பாடுகளை தளர்த்திய நியூசிலாந்து, கொரோனா பாதிப்பு முற்றிலும் கட்டுப்படுத்தப்பட்டதாக அறிவித்தது.
அதே நேரத்தில் கடந்த மாதம் ஆக்லாந்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். ஆகையால் மீண்டும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டன. ஆனாலும், கொரோனா பாதிப்பின் 2ம் அலை வீச தொடங்கியுள்ளதாக சுகாதாரத் துறையினர் கூறி உள்ளனர். இந் நிலையில் 3 மாதங்கள் கழித்து, கொரோனாவுக்கு ஒருவர் பலியாகி உள்ளார்.
இது குறித்து பேசிய சுகாதாரத்துறை அதிகாரிகள், கடந்த மாதம் ஆக்லாந்தில் தோன்றிய 2வது அலையின் ஒரு பகுதியாக இவர் பலியாகி உள்ளார் என்று கூறினர். இந்த உயிரிழப்பை அடுத்து, நியூசிலாந்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 23 ஆக உயர்ந்துள்ளது. கடைசியாக மே 24ம் தேதி உயிரிழப்பு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.