சென்னை: தமிழக சட்டப்பேரவையின் புத்தாண்டு கூட்டத்தொடர் 11ந்தேதி வரை நடைபெறும் என சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார்.
தமிழ்நாடு சட்டப்பேரவையின் ஆண்டின் முதல் கூட்டத்தொடர் ஜனவரி 6ந்தேதி ஆளுநர் உரையுடன் தொடங்குவதாக அறிவித்த நிலையில், சட்டசபையின் நிகழ்வில் பங்கேற்ற ஆளுநர், தேசியகீதம் இசைக்கவில்லை என கூறி, அவையில் இருந்து வெளிநடப்பு செய்தார். இதையடுத்து, சபாநாயகர் ஆளுநர் உரையை வாசித்தார். பின்னர், சட்டமன்ற அலுவல் ஆய்வு குழு கூடி, பேரவை எத்தனை நாட்கள் நடைபெறும் என்பதை முடிவு செய்தது.
இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த சபாநாயகர் அப்பாவு, சட்டப்பேரவை கூட்டத்தை எத்தனை நாட்கள் நடத்துவது என்பது குறித்து கூடி முடிவு எடுக்கப்பட்டுள்ளது. 7ம் தேதி (இன்று) சட்டப்பேரவை மீண்டும் கூடும். இன்றைய தினம் சட்டமன்ற பேரவை முன்னாள் உறுப்பினர் மறைவு குறித்து இரங்கல் குறிப்பு வாசிக்கப்படும். சட்டப்பேரவை உறுப்பினர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவு குறித்து பேரவையில் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்படும். தொடர்ந்து அவை ஒத்திவைக்கப்படும்.
அடுத்து 4 நாட்கள் தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் நடைபெறும். 8ம் தேதி (நாளை) ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் முன்மொழியப்பெற்று விவாதம் தொடங்கும். தொடர்ந்து 9, 10ம் தேதிகளில் ஆளுநர் உரை மீதான விவாதம் நடைபெறும். 11ம் தேதி ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்திற்கு பதில் அளித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிலளிப்பார். அரசினர் சட்ட முன்வடிவுகள் ஆய்வு செய்தல் மற்றும் நிறைவேற்றுதல், ஏனைய அரசினர் அலுவல்கள் நடைபெறும். காலை 9.30 மணிக்கு பேரவை கூடும் என தெரிவித்தார்.
பின்னர் ஆளுநர் வெளியேறியது தொடர்பான சர்ச்சை குறித்து பேசியவர், ‘அண்ணா பல்கலைக்கழக மாணவி விவகாரத்தில் நீதி கேட்டு சட்டப்பேரவைக்கு காங்கிரஸ் உறுப்பினர்கள் கருப்பு பேட்ச் அணிந்து வந்திருந்தார்கள். அதிமுகவினர் கையில் பதாகைகளுடன் வந்திருந்தார்கள். ஆளுநர் எழும்பும்போதுதான் மற்ற கட்சியினர் பதாகைகளைக் காட்டினர். பல்கலைக்கழக வேந்தர் என்ற முறையில் அவருக்கு எதிராகக் காட்டினார்களா எனத் தெரியவில்லை. அவர்களுக்கு பேசவும் வாய்ப்பு வழங்கப்படவில்லை என்பதால் அவர்கள் யாருக்கு எதிர்ப்பு தெரிவித்தார்கள் என்று தெரியவில்லை.
ஆளுநர் உரைக்கு குந்தகம் விளைவிக்கும் வண்ணம் ஒரு கலவர நோக்கத்துடன் செய்ததால் அதிமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சியின் உறுப்பினர்களை வெளியேற்றினோம். ஆளுநருக்கு மதிப்பளித்துதான் அவர்களை வெளியேற்றினோம்.
அரசமைப்பு விதி 176 (1) இன்படி, ஆளுநர் உரை வாசிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆளுநர் தனது ஜனநாயகக் கடமையை நிறைவேற்றியிருக்க வேண்டும். தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக இவ்வாறு செய்திருக்கிறார். இதற்கு அவையில் தீர்மானம் நிறைவேற்றி கண்டனம் செய்திருக்கிறோம்.
சட்டப்பேரவை நிகழ்வுகள் மரபுப்படி நடைபெறுகிறது. இதுவரை எந்த ஆளுநரும் இப்படிச் செய்ததில்லை. 1995-ல் ஆளுநர் சென்னா ரெட்டி ஆளுநர் உரையை வாசிக்காதபோது அவரை திரும்ப பெற வேண்டும் என்று முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தீர்மானம் நிறைவேற்றினார். புதிய ஆளுநரை நியமிக்கும்போது அரசிடம் பரிந்துரை கேட்க வேண்டும் என்றும் கூறினார். பின்னர் 1996 பிப்ரவரியில் ஆளுநர் உரை நடந்தது.
பேரவைத் தலைவராகிய நான் சென்று ஆளுநருக்கு முறையாக அழைப்பு விடுத்தேன். அவர்களும் மகிழ்ச்சியாக உபசரித்தார்கள். அரசியலமைப்புப் படி ஆளுநருக்கு மரியாதை அளித்தோம். சட்டப்பேரவை மரபுப்படி, தமிழக கலாசாரப்படி முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து, நிகழ்ச்சி நிறைவு பெறும்போது தேசிய கீதம் இசைக்கப்படும்.
தமிழ்நாட்டில் அனைத்து அரசு நிகழ்ச்சிகளிலும் இப்படித்தான் நடக்கிறது. எனவே, சட்டப்பேரவை நிகழ்வுகளும் அவ்வாறே நடைபெறும். தமிழ்நாட்டு மரபுகளை மாற்ற முடியாது. ஆளுநர் வரும்போதே இங்கு தேசிய கீதம் இசைக்கப்பட வேண்டும் என்றால் என்ன செய்வது?
ஆளுநர் திடீரென வெளியேறியது ஏன்? என்பது குறித்த வெளியான விளக்கம் தெலங்கானாவில் ஒருமுறை ஆளுநராக இருந்த தமிழிசை சௌந்தரராஜனுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. அவரும் வரவில்லை, அங்கு சட்டப்பேரவை நடக்கவில்லையா? இதே ஆளுநர் இருந்தால் அடுத்த ஆண்டும் இதே மாதிரிதான் நடைபெறும்’ என்றார்.
நேரலை செய்யப்படவில்லை ஏன்? என செய்தியாளர்கள் கேட்டதற்கு, ‘சட்டப்பேரவையில் நிகழ்ந்த தகராறில் என்ன தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது என்று தெரியவில்லை. எனக்கு தெரியாது, நான் கேட்டுச் சொல்கிறேன். நீங்கள் நேரலை செய்கிறீர்கள் என்று நான் நினைத்துக்கொண்டிருக்கிறேன்’ என்றார்.
மேலும் ஆளுநர் அவையை அவமதிப்பது நாடாளுமன்றத்திலோ பாஜக ஆளும் மாநிலங்களிலோ இப்படி ஏதாவது நடந்திருக்கிறதா? என்றும் கேள்வி எழுப்பினார்.