சென்னை:
புத்தாண்டையொட்டி, இன்று சென்னை கடற்கரை உள்பட பல இடங்களில் கொண்டாட்டங்கள் நடைபெற உள்ளது. இதையடுத்து, இன்று இரவு பல்வேறு சாலைகளில் போக்குவரத்து காவல்துறை போக்குவரத்ததை தடை செய்தும், மாற்றங்களையும் செய்து உள்ளது.
அதன்படி, மெரினா கடற்கரை சாலையான காமராஜர் சாலை உள்பட, சென்னை முழுவதும் உள்ள 75 மேம் பாலங்களிலும் போக்குவரத்துக்கு தடை செய்யப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
புத்தாண்டு காரணமாக ஜொலிக்கும் சென்னை மெரினா கடற்கரை சாலையான காமராஜர் சாலை இன்று இரவு 8 மணி முதல் அதிகாலை 4 மணி வரை போக்குவரத்துக்கு தடை செய்யப்பட்டு உள்ளது.
அடையாறில் இருந்து காமராஜர் சாலை நோக்கி வரும் வாகனங்கள் இரவு 8 மணிக்கு பிறகு சாந்தோம் கச்சேரி சாலை வழியாக சென்று ராயப்பேட்டை வழியாக அண்ணா சாலையை சென்றடையலாம்.
பாரிமுனை பகுதியில் இருந்து அடையாறு நோக்கி வரும் வாகனங்கள் போர் நினைவுச் சின்னம், கொடிமரச் சாலை வழியாக அண்ணா சாலையை சென்றடையலாம்.
மெரினா புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு வருபவர்கள் தங்களது வாகனங்களை நிறுத்த ராணி மேரிக் கல்லூரி, சிவானந்த சாலை, சேப்பாக்கம் ரயில் நிலையம் அருகில், லாயிட்ஸ் சாலை, டாக்டர் பெசண்ட் சாலை உட்பட ஆறு இடங்களில் அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.
பாதுகாப்பு ஏற்பாடுகள்:
விபத்துகளை தவிர்ப்பதற்கு இரவு நேரத்தில் சென்னையில் உள்ள சுமார் 75 மேம்பாலங்கள் போக்குவரத்துக்கு தடை செய்யப்படுகிறது.
மெரினா மற்றும் எலியட்ஸ் கடற்கரைகளில் சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
கிழக்கு கடற்கரை சாலை, பழைய மகாபலிபுரம் சாலை, ஜி.எஸ்.டி. சாலை, அண்ணாசாலை பகுதிகளிலும் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.
புத்தாண்ட கேளிக்கைக்காக அனுமதி பெற்றுள்ள கேளிக்கை விடுதிகள், நட்சத்திர விடுதிகள் நள்ளிரவு ஒரு மணிக்கு மேல் திறந்து வைக்க கூடாது.
பொதுமக்கள் கூடும் இடங்கள், வழிப்பாட்டு தளங்கள் உள்பட 100 இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தபட்டுள்ளது. மக்கள் கூட்டத்தை பறக்கும் கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்.
புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது பெண்களின் பாதுகாப்பிற்காக அம்மா ரோந்து வாகனத்தில் மகளிர் போலீசார் பாதுகாப்பு பணிகளை மேற்கொள்வார்கள்.
சென்னை நகரில் சுமார் 15 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள் .
விபத்தில்லா புத்தாண்டு என்ற இலக்கோடு களமிறங்கும் காவல் துறை, விபத்துக்களை தவிர்ப்பதற்காக குடிப்போதையில் வாகனம் ஓட்டும் நபர்களை பிடிக்க 25 தனிக் குழுக்களை ஈடுப்படுத்துகின்றனர்.
இரண்டாயிரத்து 500 போக்குவரத்து போலீசார் கொண்ட குழுவில் 368 இடங்களில் வாகன தணிக்கையும் செய்யப்படுகிறது. அப்போது வாகனத்தில் சாகசத்தில் ஈடுப்படுவது, குடிப்போதையில் சிக்கினால் அவர்களின் ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்படும் என காவல் துறையினர் எச்சரித்துள்ளனர்.
புத்தாண்டு தொடர்பான பாதுகாப்பு பணிகள் போக்குவரத்து காவல் கூடுதல் ஆணையர் அருண் மற்றும் சென்னை தெற்கு மண்டல கூடுதல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்ஹா தலைமையில் நடைபெற்று வருகிறது.