சென்னை:
2019ம் ஆண்டு புத்தாண்டு பிறப்பை கொண்டாடியவர்களில், தமிழகம் முழுவதும் 13 பேர் விபத்தில் சிக்கி பலியாகி உள்ளனர். மேலும் 300க்கும் மேற்பட்டோர் காயமுடன் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது விபத்துக்கள் ஏற்படாத வாறு தமிழகம் முழுவதும் காவல் துறையினர் பல்வேறு எச்சரிக்கைகளையும், பாதுகாப்பு ஏற்பாடுகளையும் செய்திருந்தனர். சென்னையில் மட்டும் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காவல்துறையினர் பணியாற்றி வந்தனர்.
இந்த நிலையிலும் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது சென்னை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் நடைபெற்ற சாலை விபத்துகள் காரணமாக 31 சாலை விபத்து தொடர்பான வழக்குகள் பதிவு செய்யப்பட்ட நிலையில் 8 பேர் விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளதாகவும், பலர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளதாகவும் தகவல் வெளியாகி யுள்ளது.
மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டிய 263 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும, இரு சக்கர வாகனங்களில் அதிக நபர்களை ஏற்றிச் சென்றதாக, 233 வழக்குகளும், அதிவேகமாக வாகனம் ஓட்டிய தாக 33 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன. விபத்தில் உயிரிழந்தவர்கள் அனைவரும் இளைஞர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதுதவிர மதுரை அருகே புத்தாண்டு கொண்டாட்டத்தில் பங்கேற்ற ஒருவர் விபத்தில் சிக்கி உயிரிழந்தார். கோவையில் 3 பேர், தருமபுரியில் ஒருவர் உள்பட தமிழகம் முழுவதும் 130 சாலை விபத்து தொடர்பான வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும், இந்த விபத்துக்கள் காரணமாக மொத்தம் 13 பேர் பலியாக இருப்பதாகவும் காயமடைநத் 300க்கும் மேற்பட்டோர் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.