சென்னை: 2023 புத்தாண்டு தொடக்கத்தை முன்னிட்டு, தமிழ்நாட்டில் ரூ.1000 கோடி அளவுக்கு மது விற்பனை நடைபெற்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மதுக்கடைகள் இரவு 10மணிக்கு மூடப்பட்டாலும், பிளாக் மார்க்கெட்டில் அதிக விலைக்கு மதுவிற்பனை ஜோரோக நடைபெற்றது.
தமிழகம் முழுதும் உள்ள 5,300 டாஸ்மாக் கடைகள் உள்ளன. மேலும் பல ஆயிரக்கணக்கான பார்களும் உள்ளன. பொதுவாக விடுமுறை நாட்கள், திருவிழா நாட்களில் மது விற்பனை அமோகமாக இருக்கும். அதன்படி இந்த புத்தாண்டிற்கு மேலும் மது விற்பனை அதிகரிக்கும் என்பதால், கூடுதலாக சரக்குகள் இருப்பு வைக்கப்பட்டன.
கடந்த மார்ச் மாதம் திமுக அரசு மதுவிற்பனை விலையை உயர்த்தியதால் குறைந்த மதுவிற்பனை, புத்தாண்டையொட்டி, மதுவிற்பனை அமோகமாக நடைபெற்றுள்ளது. புத்தாண்டையொட்டி, டிசம்பர் 31ந்தேதி, முதலே மதுபான விற்பனை களைகட்டியது. மாலை நேரம் தொடங்கியதும், மதுவிற்பனை கடைகளில் கூட்டம் அலைமோதத் தொடங்கியது. இரவு 7 மணிக்கு மேலும் கூட்டம் மேலும் அதிகரித்தது. வயது வித்தியாசமின்றி, சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை பல வயதினரும், மதுபாட்டில்களை வாங்கிச் சென்றனர். பலர் டாஸ்மாக் கடை முன்பே குடித்தனர். இளைஞர்கள் சாலையோரத்தில் சேர்ந்து நின்று குடித்து கும்மாளமிட்டனர்.
இதற்கிடையில், மதுக்கடைகள், இரவு 10மணிக்கு அடைக்கப்பட்டது. இருந்தாலும் பல மதுபானக்கடைகளில், ஷட்டரை சாத்திவிட்டு, சைடில் மது விற்பனை நடைபெற்று வந்தது. மேலும் பல இடங்களில் டாஸ்மாக் கடைகள் அருகே உள்ள பெட்டிக்கடைகளில் மதுவிற்பனை அமோகமாக அதிக விலைக்கு விற்பனையானது. இரவு முழுவதும் பல இடங்களில் மதுவிற்பனை களைகட்டியது.
நள்ளிரவு நேரத்தில் பல இடங்களில் போலீசார் சோதனை நடத்தியதால், பலர் மதுபானங்களை கையில் வாங்கிச்சென்று, வீடுகளுக்கும், வீடுகள் அருகே உள்ள மறைவன இடங்களுக்கும் சென்று மது அருந்தினர்.
இந்த நிலையில், புத்தாண்டையொட்டி, கடந்த 31ந்தேதி முதல் நேற்று வரை ரூ.1000 கோடிக்கு மது விற்பனை நடைபெற்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த 31-ந்தேதி மட்டும் ரூ.610 கோடிக்கு மது விற்பனை நடந்ததாக டாஸ்மாக் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சென்னை, மதுரை, கோவை, திருச்சி, சேலம் ஆகிய 5 மண்டலங்களிலும் கடந்த காலத்தை விட மது விற்பனை அதிகரித்துள்ளது.