சென்னை: சென்னை உள்பட நகர்ப்புறங்களில் அரசு பேருந்துகளின் இருப்பிடங்களை அறிய சில மொபைல் செயலிகள் புழக்கத்தில் உள்ள நிலையில், தற்போது புதிய இணையதளத்தை தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறை வடிவமைத்து உள்ளது. இந்த இணையதளத்தை, போக்கு வரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார்.
சென்னை உள்பட நகர்ப்புறங்களில் பயணிகள், பேருந்துக்காக அதிக நேரம் காத்திருக்கும் சூழல் ஏற்படுகிறது. இதை தவிர்க்க மாநில அரசு பல்வேறு புதிய நடைமுறைகளை அறிமுகப்படுத்தி வருகிறது. இதற்காக சில மொபைல் செயலிகள் நடைமுறையில் உள்ளன.
இந்த நிலையில், பஸ் பயணிகளின், பேருந்து தொடர்பாக குறைகளை தீர்ப்பதற்கான இலவச உதவி எண் மற்றும் அரசு பேருந்துகளின் இருப்பிடத்தை அறியும் இணையதளம் ஆகியவற்றை போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார்.
ஏற்கனவே இதுதொடர்பாக கடந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரில், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பஸ்களில் பயணிக்கும் பயணிகள் மற்றும் பொது மக்களின் எதிர்பார்ப்புகளை கண்டறியவும், அவர்களின் குறைகள் மற்றும் புகார்களை தீர்க்க நடவடிக்கை எடுக்கவும், ஒருங்கிணைந்த பயணிகள் குறை மற்றும் புகார் தீர்வு உதவி மையம் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது அதற்கான இணையதளம் தொடங்கப்பட்ட உள்ளது.
தமிழ்நாடு மற்றும் பக்கத்து மாநிலங்களுக்கு இயக்கப்படும் போக்குவரத்துக்கழக பஸ்களின் நேரம் மற்றும் அரசு போக்குவரத்துக்கழகங்கள் குறித்த தகவல்களை பொதுமக்கள் அறிந்துகொள்ளலாம். மேலும், பயணிகள் தங்கள் குறைகள், புகார்கள் பயணம் தொடர்பாக தகவல்கள் பதியும் வசதிகளும் இந்த இணையதளத்தில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
பொதுமக்கள் www.arasubus.tn.gov.in என்ற இணையதள முகவரியில் பொதுமக்கள் பார்த்து பயன் அடையலாம்.
இந்த இணையதளம் மூலம், மாநகர போக்குவரத்துக்கழக பஸ்களின் வருகை மற்றும் இயக்க நேரம் குறித்த விவரங்கள், வழித்தட தகவல்களை பயணிகள் அறிந்து கொள்ளலாம்.. அதற்கான ‘சென்னை பேருந்து செயலியை’ பதிவிறக்கம் செய்வதன் மூலம் மாநகர போக்குவரத்து கழகத்தின் பஸ் வருகை, பஸ்களின் நிகழ்நேர இருப்பிடம் மற்றும் எதிர்பார்க்கப்படும் வருகை நேரம் குறித்த விவரங்கள் பயணிகள் அறிந்து கொள்ள உரிய வசதி செய்யப்பட்டுள்ளது.
இந்த இணையதளத்தில் உருவாக்கப்பட்டுள்ள இணைப்பு வசதி மூலம் பயணிகள் மற்றும் பொதுமக்கள் உடனடி தளவழிப் பதிவு திட்டத்தின் வழியாக முன்பதிவு இந்த இணையதளத்தை பொதுமக்கள் தேவையான தகவல்களை தேடவும் உரிய வசதிகளுடன் ஆங்கிலம் மற்றும் தமிழில் உருவாக்கப்பட்டுள்ளது.
சென்னை தலைமைச் செயலகத்தில் போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் இந்த இணையதள வசதிகளை தொடங்கி வைத்தார். அப்போது போக்குவரத்து துறை கூடுதல் தலைமைச் செயலாளர்கோபால் மற்றும் போக்குவரத்து கழக உயர் அதிகாரிகள் உடனிருந்தனர். மேற்கண்ட தகவல் தமிழக அரசின் செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.