டில்லி

புதியதாக தொடங்கப்பட்டுள்ள லடாக் யூனியன் பிரதேசத்துக்கான புதிய வாகன பதிவு குறியீடு  ‘LA’ அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

கடந்த ஆகஸ்ட் மாதம் 5 ஆம் தேதி அன்று மத்திய அரசு விதி எண் 370 ஐ விலக்கி காஷ்மீருக்கு அளிக்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தது. அத்துடன் இந்த மாநிலம் ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் என இரு யுனியன் பிரதேசங்களாகப் பிரிக்கப்பட்டது.  கடந்த அக்டோபர் மாதம் 31 முதல் இரு யூனியன் பிரதேசங்களும் தனித்தனியே இயங்கி வருகின்றன.

நம் நாட்டில் வாகனப் பதிவு எண்ணில் உள்ள முதல் இரு ஆங்கில எழுத்துக்கள் அந்தந்த மாநிலங்களைக் குறிப்பது ஆகும்.   குறிப்பாகத் தமிழகத்துக்கு டி என் (TN) எனவும் புதுச்சேரிக்கு பி ஒய் (PY) எனவும் முதல் தொடக்கம் அமைவது வழக்கம்.    ஜம்மு காஷ்மீர்க்கு ஏற்கனவே (JK)  என உள்ளது.   ஆனால் லடாக் தற்போது புதியதாக தொடங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மத்திய சாலை போக்குவரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் LA என்னும் புதிய குறியீடு அறிமுகம் செய்ய உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அரசாணையை வெளியிட்டுள்ள அமைச்சகம் அதில் இது குறித்து அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.