டெல்லி: உச்சநீதிமன்றத்தில் வழக்கு விசாரணைகளை துரிதப்படுத்தும் நோக்கில் இன்று முதல் புதிய நடைமுறைகள் அமலுக்கு வருகிறது.

உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக சூர்ய காந்த் பொறுப்பேற்றதும், நீதிமன்ற நிர்வாகம் மற்றும் வழக்கு விசாரணைகளில் மிக முக்கிய மாற்றங்களை அறிவித்து உள்ளார். இந்த புதிய நடைமுறைகள் இன்றுமுதல் அமலுக்கு வருகின்றன. இதன்மூலம் நீதிமன்றங்களில் வழக்குகள் தேங்குவதைத் தவிர்க்கவும், விரைவான நீதியை வழங்கும் வகையில் புதிய சீர்திருத்தங்கள் டிசம்பர் 1ம் தேதி முதல் நடைமுறைக்கு வருகின்றன.
இதன்படி, புதிய வழக்குகளைப் பட்டியலிட இனி நீதிபதிகள் முன்பு வாய்மொழியாக முறையிட வேண்டிய அவசியமில்லை; அவை தானாகவே பட்டியலிடப்படும்.
தனிநபர் சுதந்திரம் மற்றும் ஜாமீன் தொடர்பான மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு குறைகள் சரிசெய்யப்பட்ட இரண்டு நாட்களுக்குள் தானாகவே விசாரணைப் பட்டியலில் சேர்க்கப்படும். அதாவது, தனிப்பட்ட சுதந்திரம் தொடர்பான விஷயங்கள் (ஜாமீன், முன்ஜாமீன் மற்றும் ஆட்கொணர்வு மனுக்கள் போன்றவை), மரண தண்டனை வழக்குகள் மற்றும் வெளியேற்றம் அல்லது இடிப்பு தொடர்பான வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டு சரிபார்த்த இரண்டு வேலை நாட்களுக்குள் தானாகவே பட்டியலிடப்படும்.
மரண தண்டனை, கட்டிட இடிப்பு நடவடிக்கை போன்ற மிக அவசரமான வழக்குகளை மட்டும் காலை 10 மணி முதல் 10.30 மணி வரை குறிப்பிடலாம். இதில் மூத்த வழக்கறிஞர்கள் வாய்மொழியாக முறையிடத் தடை விதிக்கப்பட்டு, இளைய வழக்கறிஞர்களுக்கு அந்த வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
நீதிமன்றங்களில் நீண்ட காலமாக நிலுவையில் உள்ள பழைய வழக்குகளை விரைவாக முடிக்கும் நோக்கில், இனி எக்காரணத்தைக் கொண்டும் அந்த வழக்குகளை ஒத்திவைக்க அனுமதியளிக்கப்பட மாட்டாது எனத் திட்டவட்டமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மற்ற வழக்குகளை ஒத்திவைக்க வேண்டும் என்றால், எதிர் தரப்பு வழக்கறிஞரின் முன் அனுமதியுடன், முந்தைய நாள் காலை 11 மணிக்குள் அதற்கான காரணத்தைக் குறிப்பிட்டு மின்னஞ்சல் அனுப்ப வேண்டும்.
மருத்துவக் காரணங்கள் அல்லது இறப்பு போன்ற தவிர்க்க முடியாத சூழல்களில் மட்டுமே வழக்கு ஒத்திவைப்பு கோரிக்கைகள் பரிசீலிக்கப்படும்.
வழக்கு விசாரணையில் ஏற்படும் தேவையற்ற தாமதத்தைத் தவிர்க்கவே இந்த புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
இவ்வாறு நீதிமன்றத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.