டெல்லி: வரும் 1ம் தேதி முதல் ஆர்டிஜிஎஸ் முறையில் 24 மணி நேரமும் பண பரிவர்த்தனை மேற்கொள்ளலாம் என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
நாடு முழுவதும் முன் எப்போதும் இல்லாத வகையில் டிஜிட்டல் பண வரித்தனைகள் அதிகரித்து வருகின்றன. கொரோனா கால கட்டத்தில் இதன் பயன்பாடு முன்பை விட அதிகரித்துள்ளது.
தற்போதுள்ள ஆர்டிஜிஎஸ் முறையானது, வங்கி வேலைநாட்களில காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை இயங்கும். வார விடுமுறை, பண்டிகை நாட்களில் இந்த சேவை இருக்காது. இந் நிலையில், ஆர்டிஜிஎஸ் முறை 24 மணி நேரமும் வரும் 1ம் தேதி முதல் செயல்படும் என்று ரிசர்வ் வங்கி அறிவித்து உள்ளது.
இது குறித்து நாணய கொள்கை குழுவின் கூட்டத்துக்கு பின்னர் பேசிய ஆர்பிஐ ஆளுநர் சக்திகாந்த தாஸ், இதன் மூலம் 24 மணி நேரம் ஆர்டிஜிஎஸ் சேவை கொண்ட நாடுகளில் இந்தியாவும் ஒன்றாக இருக்கும் என்றார். உலகளாவிய சந்தை ஒருங்கிணைப்பை நோக்கமாக கொண்டு இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டு உள்ளது என்றும் அவர் கூறினார்.
முன்னதாக நாட்டில் டிஜிட்டல் பரிவர்த்தனைகளை ஊக்குவிக்கும் பொருட்டு, 2019ம் ஆண்டு ஜூலை முதல் NEFT மற்றும் RTGS பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் வசூலிப்பதை நிறுத்தியது, குறிப்பிடத்தக்கது.