புதுடெல்லி: வண்ண தொலைக்காட்சிப் பெட்டிகளை இறக்குமதி செய்யும் விவகாரத்தில், புதிய கட்டுப்பாடுகளை மத்திய அரசு விதித்துள்ளதாக கூறப்படுகிறது.
இதுதொடர்பாக கூறப்படுவதாவது; பொதுவாக, சீனா மற்றும் வியட்நாம் நாடுகளிலிருந்து இந்தியாவிற்கு அதிகளவில் வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகள் இறக்குமதியாகின்றன.
இந்நிலையில், எல்லைப் பிரச்சினை தொடர்பாக, சீனாவிலிருந்து வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகளை இறக்குமதி செய்வதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்தக் கட்டுப்பாடானது, ‘சுதந்திரம் என்பதிலிருந்து கட்டுப்பாடுகளைக் கொண்டது’ என்ற வகையில் திருத்தம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், இறக்குமதிக்கான உரிமம் வழங்குவதற்கான நடைமுறை, பின்னர் தனியாக வெளியிடப்படும் என்றும் தெரிவித்துள்ளது.
அரசின் இந்த நடவடிக்கை குறித்து, ‘தைவா’ நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியும், நிறுவனருமான அர்ஜுன் பஜாஜ் கூறியதாவது, “உள்நாட்டு தொலைக்காட்சி பெட்டிகள் தயாரிப்பை ஊக்குவிப்பதற்காக எடுக்கப்பட்டிருக்கும் முதல் நல்ல நடவடிக்கை இதுவாகும். வாடிக்கையாளர்கள், சீனாவிலிருந்து பெறும் தயாரிப்புகளைப் போல, உள்நாட்டு உற்பத்தியாளர்களின் தயாரிப்புகளை இனி பெறுவர்” என்றார் அவர்.