மே.வங்க மாநிலத்தில் இன்னும் மூன்று மாதங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது.
முதல்-அமைச்சர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரினாமூல் காங்கிரஸ் கட்சிக்கும், பா.ஜ.க.வுக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது.
காங்கிரஸ் கட்சியும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான இடதுசாரிகளும் இணைந்து புதிய அணியை உருவாக்கியுள்ளனர். இந்த நிலையில் அந்த மாநிலத்தில் நேற்று புதிய கட்சி ஒன்று உதயம் ஆகி உள்ளது.
மே.வங்க மாநிலத்தில் உள்ள ‘புர்பரா ஷெரீப் அகாலே சுன்னதுல் ஜமாத்’ என்ற அமைப்புக்கு அங்குள்ள முஸ்லிம்கள் மத்தியில் செல்வாக்கு உள்ளது.
இதன் நிறுவனர் அப்பாஸ் சித்திக்கை ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சி தலைவர் அசாதுதின் ஒவைசி கடந்த மாதம் சந்தித்து பேசினார்.
தனியாக அரசியல் கட்சி தொடங்குமாறு வலியுறுத்திய, ஒவைசி, “நாம் இருவரும் இணைந்து போட்டியிட்டால் கணிசமான தொகுதிகளீல் வெல்லாம்” என தெரிவித்தார்.
இதையடுத்து அப்பாஸ், ‘இந்திய மதச்சார்பற்ற முன்னணி’ என்ற அரசியல் கட்சியை கொல்கத்தாவில் நேற்று தொடங்கியுள்ளார்.
மே.வங்க சட்டமன்ற சட்டப்பேரவை தேர்தலில் இந்த கட்சி 50 முதல் 60 தொகுதிகளில் போட்டியிடும் என எதிர் பார்க்கப்படுகிறது.
ஒவைசியின் ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சியுடன் கூட்டணி வைக்க, திட்டமிட்டுள்ள அப்பாஸ் சித்திக், கட்சி தொடங்கிய கையோடு செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர், மம்தா பானர்ஜியை கடுமையாக விமர்சனம் செய்தார்.
இதனிடையே, “இந்திய மதச்சார்பற்ற முன்னணி, பா.ஜ.க.வின் ஓர் அங்கம்” என வர்ணித்துள்ள திரினாமூல் காங்கிரஸ் கட்சி “இதனால் எங்கள் கட்சிக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது” என்றும் தெரிவித்துள்ளது.
– பா. பாரதி