புதுடெல்லி: உங்கள் வாகனத்திற்கான காப்பீட்டு பாலிசியில், நீங்கள் கட்ட வேண்டிய பிரீமியம் தொடர்பாக முடிவெடுக்கும்போது, உங்களின் டிரைவிங் திறனும் கணக்கில் கொள்ளப்படும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
அதாவது, நீங்கள் வாகனத்தை எப்படி ஓட்டுகிறீர்கள் மற்றும் இதுவரை எத்தனை விபத்துகளுக்கு காரணமாக இருந்துள்ளீர்கள் என்ற அம்சங்கள் கணக்கில் கொள்ளப்படுமாம். இந்த திட்டம் முதன்முதலில் டெல்லியில் நடைமுறைக்கு வரும் என்றும் கூறப்பட்டுள்ளது.
இந்தப் புதிய விதிமுறையை அமல்செய்வது தொடர்பான பரிந்துரைகளை அளிக்குமாறு, 9 உறுப்பினர்களைக் கொண்ட கமிட்டியை அமைத்துள்ளது காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம்(ஐஆர்டிஏ). இதுதான் காப்பீட்டிற்கான ஒழுங்குமுறை அமைப்பாகும்.
இந்த 9 நபர் கமிட்டி அடுத்த 2 மாதங்களுக்குள் தனது அறிக்கையை அளிக்க வேண்டுமாய் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளதாம். மத்திய உள்துறைச் செயலரின் கீழ் செயல்படும் ஒரு உயரதிகாரம் படைத்த கமிட்டியின் பரிந்துரையின் பேரிலேயே மேலே கூறப்பட்ட 9 நபர்கள் கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், வரும் காலங்களில் நாட்டின் பிற மாநிலங்கள் மற்றும் நகரங்களுக்கும் இந்தப் பரிந்துரைகள் விரிவாக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.