சென்னை: மின்கட்டண அளவீட்டின்போதே, மின் கணக்கீட்டாளர் மூலம் கட்டணம் வசூலிக்கும்  புதிய முறையை தமிழக மின்சார வாரியம் விரைவில் அமல்படுத்த உள்ளது. அதன்படி, பொதுமக்கள் வீட்டில் இருந்து  ஆன்லைன் மூலம் மின் கட்டணத்தை எளிதாக செலுத்த முடியும். இந்த திட்டத்தை  விரைவில் அமல்படுத்த ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. அதன்படி,  பாயின்ட் ஆஃப் சேல் கருவிமூலம், நுகர்வோரின் வீட்டுக்கே சென்று மின்கட்டணம் வசூலிக்கும் நடைமுறை அமல்படுத்தப்பட இருக்கிறது.

தமிழகத்தில் தற்போது,  மின்வாரிய அலுவலகங்கள், அரசு இ-சேவைமையங்கள், அஞ்சல் நிலையங்கள், இணையதளம், மொபைல் செயலி உள்ளிட்ட மின்னணு முறை ஆகியவற்றின் மூலம், மின்கட்டணத்தை நுகர்வோர் செலுத்தி வருகின்றனர். சென்னை உள்பட நகரப்பகுதிகளில் வசிக்கும் மக்கள் ஆன்லைன் மூலமே மின் கட்டணங்களை செலுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், பாயின்ட் ஆஃப் சேல் கருவி மூலம், கிரெடிட், டெபிட் கார்டுகளைப் பயன்படுத்தி மின்பயன்பாட்டைக் கணக்கெடுக்க ஊழியர்கள் வரும்போது, அப்போதே கட்டணம்வசூலிக்கும் முறை அறிமுகப்படுத்தப்படும் என மின்துறை அமைச்சர் தங்கமணி  ஏற்கனவே அறிவித்திருந்தார். ஆனால்,கொரோனா முடக்கம் காரணமாக, அதை நடைமுறைப்படுத்துவதில் சிக்கல் எழுந்தது.

இந்த நிலையில், விரைவில் நுகர்வோரின் வீட்டுக்கே சென்று மின்கட்டணம் வசூலிக்கும் நடைமுறை அமல்படுத்தப்பட இருப்பதாக மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். , ‘மின் கணக்கீட்டுக்கு வீடுகளுக்கு மின்வாரிய ஊழியர்கள் செல்லும்போது அவர்களிடம் பாயின்ட் ஆஃப்சேல் கருவி வழங்கப்படும். அவர்கள் மின் கட்டணத்தை தெரிவிக்கும்போது, நுகர்வோர் அப்போதே, கட்டணத்தை செலுத்த விரும்பினால் டெபிட், கிரெடிட் கார்டைப் பயன்படுத்தி செலுத்தலாம்.

இந்த வசதி தமிழகத்தில் விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. முதல்கட்டமாக சென்னை உள்பட நகரப்பகுதிகளில் இந்த நடைமுறை அமலுக்கு வர இருக்கிறது.