நாடாளுமன்றத்தின் புதிய சபாநாயகராக தேர்வுசெய்யப்பட்டுள்ள ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த ஓம் பிர்லா, முந்தைய சபாநாயகர்களைப் போலின்றி, வித்தியாசமான முறையிலும் பாராட்டத்தக்க வகையிலும் செயல்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுதொடர்பாக கூறப்படுவதாவது; ராஜஸ்தான் மாநிலத்திலிருந்து பாரதீய ஜனதா சார்பில் தேர்வு செய்யப்பட்டவர் ஓம் பிர்லா. இவர் சபையில் அதிகநேரம் அமர்ந்திருக்கிறார். கடந்தகால சபாநாயகர்களைப் போலின்றி இவர் தூய இந்தியிலேயே பேசுகிறார். அதேசமயம், உறுப்பினர்கள் தங்களுக்கு விருப்பமான மொழியில் பேசுவதற்கும் இவர் ஆட்சேபம் தெரிவிப்பதில்லை.
புதிய உறுப்பினர்கள் முக்கியப் பிரச்சினைகளை எழுப்பி பேசுவதற்கு முக்கியத்துவம் தந்து அதிகநேரம் ஒதுக்குகிறார். இதனால், மதிய உணவுநேரம் பிற்பகல் 2.30 மணிக்கே தொடங்குகிறது. மேலும், சபையில் இவர் அதட்டலான மொழி நடையையும் பயன்படுத்துவதில்லை. புதிய உறுப்பினர்களுக்கு பிரச்சினைகளின் அடிப்படையில் அதிகநேரம் வழங்குகிறார்.
நாடாளுமன்றத்தில் எழும் பிரச்சினைகளை கோபப்படாமலும், பதற்றம் அடையாமலும் லாவகமாக கையாள்கிறார். வழக்கமான சபை நடத்தும் நடைமுறையிலிருந்து பெரிதும் விலகியே இவர் செயல்படுகிறார். இதன்மூலம் இவர் எதிர்க்கட்சிகளிடமிருந்து பாராட்டுகளைப் பெறுகிறார். ஒருவர் சபையை எப்படி நடத்த வேண்டுமென்பதற்கு முன்னுதாரணமாக இருக்கிறார் ஓம் பிர்லா என்று எதிர்க்கட்சிகள் இவருக்கு பாராட்டு தெரிவித்துள்ளன.
இவர், இதற்கு முன்னர் வெறும் 5 ஆண்டுகள் மட்டுமே மக்களவை உறுப்பினராக இருந்த அனுபவம் உடையவர். அதேசமயம், ராஜஸ்தான் சட்டசபையில் 3 முறை உறுப்பினராக இருந்துள்ளார்.