டில்லி:

பொருளாதார குற்றங்கள் மற்றும்  பணம் மோசடி செய்து வெளிநாட்டுக்கு தப்பி செல்பவர்களின்  அனைத்து சொத்துக்களையும்  பறிமுதல் செய்யும் வகையில் புதிய சட்ட திருத்த மசோதா கொண்டு வரப்பட இருப்பதாக வும், அந்த மசோதாவுக்கு அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் பெறப்பட்டுள்ளதாகவும் மத்திய நிதி அமைச்சர் அருண்ஜெட்லி கூறி உள்ளார்.

சமீப காலமாக பல தொழிலதிபர்கள் முறைகேடுகள் மூலம் கோடிக்கணக்கான பணம் கொள்ளையடித்து விட்டு வெளிநாடுகளுக்கு சென்று சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வருகின்றனர்.அவர்களை கைது செய்து இந்தியாவுக்கு அழைத்து வந்து விசாரணை செய்ய முடியாத சூழல் உள்ளது.

இந்நிலையில்,  நாட்டை விட்டு தப்பி ஓடும் மற்றும் ஏற்கனவே வெளியேறிய  பொருளாதார குற்றவாளிகள் தொடர்பான  வழக்குகளில், அவர்கள் குற்றவாளி என நீதிமன்றத்தில் நிரூபித்து தண்டனை வழங்குவதற்கு முன்பாகவே அவர்களது சொத்துகளை பறிமுதல் செய்ய வழிவகை செய்யும் புதிய சட்டத்தை கொண்டு வர மத்திய அரசு அதிரடியாக முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி, நாட்டை விட்டு தப்பி ஓடும் பொருளதார குற்றவாளிகளின் சொத்துக்களை பறிமுதல் செய்யும் வகையில்,  ‘தப்பி ஓடிய பொருளாதார குற்றவாளிகள் மசோதா-2008’ என்ற சட்ட திருத்த மசோதா கொண்டு வரப்பட இருப்பதாகவும், இந்த மசோதா வுக்கு நேற்று நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது என்றும் கூறினார்.

மேலும், வரும் 5-ந் தேதி தொடங்குகிற நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாவது அமர்வின்போது, இந்த சட்ட திருத்த மசோதா  தாக்கல் செய்து நிறைவேற்றப்படும் என கூறினார்.

இந்த மசோதாவில் கூறப்பட்டுள்ள முக்கிய விவரங்கள்..

தப்பி ஓடிய பொருளாதார குற்றவாளிகளின் வழக்குகளை விசாரிக்க தனி கோர்ட்டுகள் அமைக்கப்படும்.

இந்த கோர்ட்டுகள் தப்பி ஓடிய பொருளாதார குற்றவாளிகளுக்கு பிடிவாரண்டு பிறப்பிப்பதுடன், அவர்களை தப்பி ஓடிய பொருளாதார குற் வாளிகளாக அறிவிக்கும்.

ரூ.100 கோடி மற்றும் அதற்கு மேற்பட்ட தொகையை வங்கிகளில் வாங்கி திருப்பி செலுத்தாமல் மோசடி செய்து விட்டு, வெளிநாடுகளுக்கு தப்பி ஓடுகிற அனைவரும் இந்த சட்ட வரம்புக்குள் கொண்டு வரப்படுவார்கள்.

உள்நாட்டில் மட்டுமின்றி வெளிநாடுகளிலும் உள்ள சொத்துகளும் பறிமுதல் செய்யப்படும். பினாமி சொத்துகளும் இதில் அடங்கும்.

வழக்குகளை எதிர்கொள்வதற்கு குற்றவாளிகள் இங்கே வருவதற்கு கட்டாயப்படுத்தப்படும்.

இதுபோல ஆடிட்டர்களை ஒழுங்குபடுத்துவதற்கு என்.எப்.ஆர்.ஏ. என்னும் தேசிய நிதி அறிக்கையிடல் ஆணையம் அமைக்கப்படுவதாகவும் கூறினார்.

இந்த ஆணையம் தன்னாட்சி அதிகாரம் பெற்ற அமைப்பாக இருக்கும் என்ற ஜெட்லி,  இந்த ஆணையத்துக்கு ஒரு தலைவரும், 3 முழு நேர உறுப்பினர்கள் ஒரு  செயலாளரும் இருப்பார் என்றார்.

இந்த ஆணையம் உள்நாட்டு, வெளிநாட்டு முதலீடுகளை மேம்படுத்தவும் உதவும். சர்வதேச நடைமுறைகளுக்கு ஏற்ற விதத்தில் உலகமயமாக்கப்பட்ட வணிகத்துக்கும் தனது ஆதரவை வழங்கும் என்றும் கூறினார்.