னாஜி

புதிய கோவா முதல்வர் இன்று மாலை 3 மணிக்கு மேல் பதவி ஏற்க உள்ளதாக பாஜக அறிவித்துள்ளது.

கோவா மாநில முதல்வர் மனோகர் பாரிக்கர் புற்று நோய் காரணமாக நேற்று மாலை மரணம அடைந்தார்.   தற்போது பாஜக கூட்டணிக்கு பெரும்பான்மை இல்லாததால் காங்கிரஸ் ஆட்சி கோர அழைக்குமாறு ஆளுநரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

பாஜக அலுவலகத்துக்கு எடுத்து வரப்பட்ட மனோகர் பாரிக்கர் உடல் கலா அகாடமிக்கு பொதுமக்கள் அஞ்சலிக்கு எடுத்துச் செல்லப்பட்டது.  அங்கு ஏராளமான பொதுமக்கள் வரிசையின் நின்று  அவர் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.  இன்று மாலை 5 மணிக்கு அவருக்கு ராணுவ மரியாதையுடன் இறுதிச் சடங்கு நடைபெற உள்ளது.

மனோகர் பாரிக்கர் உடல் பாஜக அலுவலகத்தில் இருந்த போதே அடுத்த முதல்வர் யார் என தேர்ந்தெடுக்கும் நடவடிக்கைகளைபாஜகவினர் தொடங்கி விட்டனர்.   அத்துடன் அவரது உடல் எரியூட்டப்படும் முன்னரே அடுத்த முதல்வர் மூன்று மணிக்கு மேல் பதவி ஏற்பார் எனவும் பாஜக அறிவித்துள்ளது.

கோவா முதல்வரின் மறைவை ஒட்டி மாநிலம் ஒரு வாரம் துக்கம் அனுசரிக்க உள்ளது.  இந்த ஒரு வாரம் அனைத்து கோவா மாநில அரசு அலுவலகங்களிலும் தேசியக் கொடி அரைக்கம்பத்தில் பறக்க விடப்படும்.

மனோகர் பாரிக்கரின் இறுதிச்சடங்குகளில் கலந்துக் கொள்ள பிரதமர் மோடி மற்றும் பல அரசியல் தலைவர்கள் கோவாவுக்கு வந்துள்ளனர்.