அம்பாலா :
பிரான்சில் நாட்டில் இருந்து வாங்கப்பட்டுள்ள 5 ரஃபேல் போர் விமானங்கள் இன்று பிற்பகல் அம்பாலா விமான நிலையத்தில் தரையிறங்கின. 23ஆண்டுகளுக்கு பிறகு இந்தியா ராணுவத்தில் புதிய மைல்கல்லாக ரஃபேல் போர் விமானங்கள் வாங்கப்பட்டு, இந்தியா வந்தடைந்துள்ளது.
பிரான்சில் இருந்து, 59 ஆயிரம் கோடி ரூபாய் செலவில், 36 அதிநவீன ரபேல் போர் விமானங்களை வாங்க, நான்கு ஆண்டுகளுக்கு முன், மத்திய அரசு ஒப்பந்தம் போட்டது. அவற்றில், முதல்கட்ட மாக, 5 ரஃபேல் போர் விமானங்கள், 27ந்தேதி அன்று பிரான்சில் இருந்து புறப்பட்டன. இடையில் சவூதியில் நேற்று இறங்கி சற்று ஓய்வெடுத்த நிலையில், பின்னர் மீண்டும் அங்கிருந்து புறப்பட்டு, இன்று பிற்பகல் அரியானாவில் உள்ள, அம்பாலா விமானப்படை தளத்தில் தரையிறங்கின.
இந்த விமானங்கள் இந்திய எல்லையில் நுழைந்ததும், அரபிக்கடலில் பாதுகாப்பு பணியில் இருந்த ஐஎன்எஸ் கோல்கட்டா டெல்டா 63, ஐஎன்எஸ் டெல்டா போர்க்கப்பல்களை தொடர்பு கொண்டன. இதனை தொடர்ந்து, ஐந்து ரபேல் போர் விமானங்களும், இந்திய வான் எல்லையில் நுழைந்தன. அந்த விமானங்களை இந்திய விமானப் படைக்கு சொந்தமான சுகோய் சூ 30 எம்கேஐ விமானங்கள் அழைத்து வந்தன.
அம்பாலாவில், தரையிறங்கிய விமானங்களுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. ரஃபேல் விமானங்களுக்கு தண்ணீரை பீய்ச்சி அடித்து ராஜ மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது. ரஃபேல் விமானங்களை விமான படைத் தளபதி ராகேஷ் பதோரியா முறைப்படி வரவேற்றார்.
இதற்காக நடந்த நிகழ்ச்சியில், இந்திய விமானப்படை தளபதி கலந்து கொண்டு விமானங்களை விமானப்படையில் சேர்க்க உள்ளார். இந்த போர் விமானங்கள், தங்க அம்புகள் என்ற படை பிரிவில் சேர்த்து இயக்கப்பட உள்ளது.
இந்த 5 ரஃபேல் போர் விமானங்களை லடாக்கில் சீன எல்லையை ஒட்டி பாதுகாப்பு பணியில் நிறுத்த இந்தியா திட்டமிட்டு உள்ளதாக கூறப்படுகிறது.
ரஃபேல் ஒப்பந்தத்தை இறுதி செய்த ராகேஷ் பதோரியா பெயரின் முதல் எழுத்துக்களை கொண்டு ஆர்.பி 001 என பெயர் சூட்டப்பட்டுள்ளது. கேப்டன் ஹர்கிரத் சிங் தலைமையிலான இந்திய விமானிகள் ரஃபேல் விமானங்களை இயக்கி தாயகம் எடுத்து வந்தனர்
ஏற்கனவே 1997 ஆம் ஆண்டு ரஷ்யாவின் சுகோய்-30 போர் விமானங்கள் இந்திய படையில் சேர்க்கப்பட்டன. அதையடுத்து சுமார் 23 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய விமான படைக்கு இறக்குமதியான ரஃபேல் போர் விமானங்கள் சேர்க்கப்பட உள்ளது. இது இந்திய இந்திய ராணுவ வரலாற்றில் மற்றொரு மைல்கல் நிகழ்வாக கருதப்படுகிறது.