டில்லி

டில்லியின் முன்னாள் துணை முதல்வர் மனிஷ் சிசோடியா மீது புதிய குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

டில்லியை ஆளும் ஆம் ஆத்மி அரசு கடந்த 2021 நவம்பரில் புதிய மதுபானக் கொள்கையை அமல்படுத்தியது.  அந்த நேரத்தில் 849 மதுபான கடைகளுக்கு உரிமங்கள் வழங்கியதில் முறைகேடுகள் நடைபெற்றிருப்பதாக சிபிஐ மற்றும் அமலாக்கத் துறை குற்றம் சாட்டியுள்ளன. இவ்விரு புலனாய்வு அமைப்புகளும் தனித்தனியாக வழக்குகளை பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன.

கடந்த பிப்ரவரி 26-ம் தேதி இவ்வழக்கில் டில்லி முன்னாள் துணை முதல்வர் மணிஷ் சிசோடியாவை சிபிஐ கைது செய்தது. கடந்த மார்ச் 9 ஆம் தேதி அன்று அவர் இதே விவகாரத்தில் அமலாக்கத் துறை சார்பில் கைது செய்யப்பட்டார்.

இதுவரை மதுபானக் கொள்கை ஊழல் வழக்கில் டெல்லியில் உள்ள பணப் பரிமாற்ற மோசடி தொடர்பான சிறப்பு நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை சார்பில் 4 குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

இந்த வரிசையில் அமலாக்கத் துறை சார்பில் மணிஷ் சிசோடியா மீது நேற்று புதிய குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.