Home தமிழ் நாடு

அடுத்த 12 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி! வானிலை ஆய்வு மையம் தகவல்…

சென்னை:  அடுத்த 12 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகும் வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி தொடர்ந்து நீடிப்பதால் டிசம்பர் 3-ந்தேதி வரையில் மழை நீடிக்கும் என்று ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருந்து.

இதுகுறித்து  சென்னை வானிலை ஆய்வு மையம்  வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தெற்கு அந்தமான் கடல் பகுதியில் புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று உருவாகிறது , இது நாளை மறுதினம் (2-ந்தேதி) காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும்.  புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாக தென்கிழக்கு, மத்திய வங்ககடல், அந்தமான் கடல் பகுதிகளில் பலத்த சூறாவளி காற்று வீசக் கூடும்.

இன்று (30ந்தேதி) முதல் மீனவர்கள் இந்த கடல் பகுதிகளுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

முன்னதாக குமரிக்கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக 30-ந்தேதி (இன்று) கன்னியாகுமரி, நெல்லை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் அனேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

இவ்வாறு கூறப்பட்டுள்ளது.