குவஹாத்தி: சிஏஏ சட்டத்தை எதிர்த்து அஸ்ஸாம் மாநிலத்தில் கடந்தாண்டு நடைபெற்ற போராட்டத்தில், காவல்துறை துப்பாக்கிச் சூட்டில் 5 பேர் உயிரிழந்த முதலாண்டு நினைவையொட்டி, நாளை வெள்ளிக்கிழமை முதல் புதிய போராட்டத்தை அறிவித்துள்ளனர் சிஏஏ போராட்டக் குழுவினர்.
மேலும், தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ள சிஏஏ எதிர்ப்புப் போராளியும், கிரிஷக் முக்தி சங்ரம் சமிதி என்ற அமைப்பின்(கேஎம்எஸ்எஸ்) தலைவருமான அகில் கோகோயை விடுதலை செய்யும் வகையிலான புதிய போராட்டத்தையும் அறிவித்துள்ளனர். அவர், கடந்தாண்டு டிசம்பர் 12ம் தேதி முதல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
கேஎம்எஸ்எஸ் உடன் இணைந்து, அஸ்ஸாம் மாநிலத்தின் 17 இதர போராட்ட அமைப்புகளும், கிழக்கு அஸ்ஸாமின் சிவசாகர் என்ற இடத்திலிருந்து போராட்டத்தை அறிவித்துள்ளன. இந்தப் போராட்டம், படிப்படியாக மாநிலம் முழுவதும் விரிவுபடுத்தப்படும் என்று கூறப்பட்டுள்ளது.