டெல்லி: மத்தியஅரசு அமல்படுத்த இருப்பதாக கூறப்படும் அனைத்து மக்களுக்குமான பொது சிவில் சட்டத்தை  ஏற்க மாட்டோம் என முஸ்லிம் தனியார் சட்ட வாரியம் தெரிவித்துள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்தியா முழுவதும் சமத்துவம் நில, அனைவருக்கும் ஒரே வகையான சட்டம் தேவை என பல ஆண்டுகளாக வலியுறுத்தப்பட்டு வருகிறது. சாதி, மதம் என தனித்தனியாக சட்டங்களால் மற்ற மததத்தினர்கள்  உள்பட பல பாதிப்புகள் ஏற்பட்டு வருகின்றன. இதனால், அனைத்து மதத்தினரும் ஏற்றுக்கொள்ளும் வகையில் பொதுசிவில் சட்டத்தை கொண்டு வர மத்தியஅரசு முனைப்புகாட்டி வருகிறது. சமீபத்தில், சுதந்திர தின விழாவில்  பேசிய பிரதமர் மோடி, பொதுசிவில் சட்டம், ஒரேநாடு ஒரே தேர்தல் போன்ற சட்ட திருத்தங்களை அமல்படுத்த வேண்டிய நேரம் இது என பேசியிருந்தார். இதனால், இந்த சட்டம் விரைவில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், பொது சிவில் சட்டத்தை ஒருபோதும் ஏற்கமாட்டோம் என முஸ்லிம் தனியார் சட்ட வாரியம் தெரிவித்துள்ளது.

பொது சிவில் சட்டம் என்பது ஒரு நாட்டின் அனைத்து சமயம், மொழி, இன மக்களுக்கான பொது உரிமையியல் சட்டங்களை குறிக்கிறது. மத்தியில் பாஜக தலைமையிலான அரசு 2014-ஆம் ஆண்டு ஆட்சியை கைப்பற்றி 2 ஆண்டுகள் கடந்த பின், 2016 ஆம் ஆண்டு 21-வது சட்ட ஆணையம் நிறுவப்பட்டது.

பாஜக அரசால் அமைக்கப்பட்ட இந்த ஆணையம், பொது சிவில் சட்டத்தின் சாதக பாதகங்களை 2 வருடங்கள் ஆய்வு செய்து 152 பக்க அறிக்கையை 2018 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வெளியிட்டது. அதில், இந்துக்கள், கிறிஸ்துவர்கள், இஸ்லாமியர்கள், பார்சியர்கள் என அனைத்து சமூகத்தை சேர்ந்த பெண்களுக்கும் தனிப்பட்ட பாதிப்புகள் அதிகமாக உள்ளது. அவற்றை களைய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறப்பட்டது.

நாட்டில் இந்துக்கள் பெரும்பான்மையாகவும், கிறிஸ்தவா்கள், இஸ்லாமியர்கள், சீக்கியர்கள், பெளத்தர்கள், சமணா்கள், பாா்சி இனத்தவர் உள்ளிட்டோர் சிறுபான்மையினராக வும் உள்ளனர். திருமணம், விவாகரத்து, சொத்துப் பகிா்வு உள்ளிட்டவற்றுக்கான சட்டங்கள் ஒவ்வொரு மதத்தினருக்கென்று தனித்தனியே உள்ளன. அதற்குப் பதிலாக, அனைவரும் ஒரே மாதிரியான சட்டத்தை பின்பற்றச் செய்வதே, பொது சிவில் சட்டத்தின் நோக்கமாக கூறப்படுகிறது. பொது சிவில் சட்டத்திற்கு கொண்டு வந்தால்,  சாதி மத வேறுபாடுகள் களையப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் சில மதங்களில் பல தடைகள் அகற்றப்பட வாய்ப்பு உள்ளது. இதனால், இந்த சட்டத்துக்கு இஸ்லாமியர் உள்பட சில அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

இந்த நிலையில்,  மத்தியஅரசு கொண்டு வரும் பொது சிவில் சட்டத்தை அகில இந்திய முஸ்லிம் தனியார் சட்ட வாரியம்  ஒருபோதும் அனுமதிக்காது என தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக அகில இந்திய முஸ்லிம் தனியார் சட்ட வாரியம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,  “பொது சிவில் சட்டம் முஸ்லிம்களின் ஷரியத் சட்டத்திற்கு எதிராக உள்ளது. இந்தியாவில் உள்ள முஸ்லிம்கள் தங்கள் மதத்தின்படி சட்டங்களை நடைமுறைப்படுத்த உரிமை உண்டு. இது ஷரியத் சட்டம் 1937 ஐ இந்திய அரசியலமைப்பு அனுமதி வழங்கியுள்ளது. அரசியலமைப்பின் 25 வது பிரிவில், குடிமக்கள் மதத்தை பின்பற்றுவதற்கும், பிரச்சாரம் செய்வதற்கும், அதன் சட்டங்களுக்கு கட்டுப்படுவதற்கும் அடிப்படை உரிமை உண்டு.

முஸ்லிம்களைத் தவிர மற்ற சமூகங்களின் குடும்பச் சட்டங்களும் அவர்களின் சொந்த மத மற்றும் பழமையான மரபுகளுக்கும் அரசியலமைப்புச் சட்டம் அடிப்படைஉரிமையை வழங்கியுள்ளது.” என அகில இந்திய முஸ்லிம் தனியார் சட்ட வாரியம் தெரிவித்துள்ளது.