தமிழக ஆளுனர் பன்வாரிலால் புரோகித், பாரதியார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்ள நேற்று கோவை சென்றார். அந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிறகு கோவை மாவட்ட ஆட்சியர் மாநகராட்சி தனி அதிகாரி, மாநகர காவல்துறை ஆணையர் உள்பட முக்கிய அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
மூன்று மணி நேரம் நடந்த இந்த ஆலோசனையில் கோவை மாவட்டத்தில் செய்துள்ள வளர்ச்சி பணிகள் தற்போது செய்து வரும் பணிகள், இனிமேல் செய்ய உள்ள பணிகள் குறித்து அதிகாரிகளிடம் தனித்தனியாக ஆளுனர் கேட்டறிந்தார்.
இந்த நிகழ்வு தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. எதிர்க்கட்சிகள், ஆளுநர் ஆய்வு நடத்தியதற்கு கண்டனம் தெரிவித்தன.
இந்த நிலையில் இன்று காலை கோவை காந்திபுரம் பேருந்து நிலையம் சென்ற ஆளுநர், அங்கு தூய்மை இந்தியா திட்ட பணிகள் குறித்து ஆய்வு நடத்தினார். மேலும், துடைப்பம் மூலம் குப்பைகளை அள்ளி தூய்மை பணியிலும் ஈடுபட்டார். இந்த நிகழ்ச்சியின் போது உள்ளாட்சிதுறை அமைச்சர் எஸ்.பி வேலுமணியும் இருந்தார்.
பிறகு காந்திபுரத்தில் நடந்த தூய்மை இந்தியா நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய ஆளுநர், “களத்திற்கு நேரில் சென்று ஆய்வு நடத்தினால்தானே அரசை பாராட்ட முடியும்” என்றார்.
அதே நேரம், ஆளுநர் தமிழக அரசின் நடவடிக்கைகளில் தலையிடுவதாக எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்திருக்கின்றன. ஆளும் அமைச்சர்களோ, ஆளுநர் ஆய்வு செய்வது தவறில்லை என்று பேசி வருகின்றனர்.
அதே போல பாஜகவினரும் ஆளுநர் ஆய்வு செய்ததை சரி என்றே சொல்லி வருகிறார்கள்.
இந்த நிலையில் சமூகவலைதளங்களில் நெட்டிசன்கள் பலர் முக்கிய கேள்வி ஒன்றை எழுப்பி இருக்கிறார்கள்.
அதாவது, “ஆளுநர் ஆய்வு செய்வது தவறில்லை என்று பாஜகவினர் தெரிவிக்கிறார்கள். மாநிலத்துக்கு ஆளுநர் போலத்தான் மத்திய அரசுக்கு ஜனாதிபதி.
ஆகவே மத்திய அரசின் பணிகளை ஜனாதிபதி ஆய்வு செய்வாரா” என்று கேட்டிருக்கிறார்கள்.
இந்த அதிரடி கேள்விக்கு பாஜகவினர்தான் பதில் சொல்ல வேண்டும்.