டி.வி.எஸ் சோமு பக்கம்:

டில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் படித்த தமிழக மாணவர் முத்துகிருஷ்ணன் மரணம், மிக துயரத்தை ஏற்படுத்துகிறது.

27 வயது இளைஞர்.அவரது கனவுகளையும் சேர்ந்து சுமந்துகொண்டிருந்த பெற்றோர்கள், ஆற்றாமையால் கதறித்துடிக்கிறார்கள்.

“முத்துகிருஷ்ணன் தற்கொலை செய்துகொண்டிருக்க வாய்ப்பில்லை. கொலை செய்யப்பட்டிருக்கிறார். நீதி விசாரணை வேண்டும்” என்று கோரும் அவர்கள் உடலை வாங்க மறுத்து வருகிறார்கள்.

பெற்ற மனது. தாங்க முடியாத இழப்பு.

அதே நேரம், அவர்கள் சொல்வதே கூட உண்மையாக இருக்கலாம். ஏனென்றால் சமீப காலத்தில் ஜே.எம்.யூ. பல்கலையில் நடந்த சில நிகழ்வுகள் அப்படி.

அதற்காக, , விசாரணைக்கு முன்பே, “முத்துகிருஷ்ணன் கொலைதான் செய்யப்பட்டார். ஆதிக்க சாதியினரின் செயல் இது” என்று சமூகவலைதளங்களில் பலரும்  தீர்ப்பெழுதுகிறார்கள். இது சரியாகத் தோன்றவில்லை.

முத்துக்கிருஷ்ணன் கொலை செய்யப்பட்டிருக்க வாய்ப்பு இருப்பது போலவே, தற்கொலை செய்துகொண்டிருக்கவும்..( அதுவும் தனிப்பட்ட காரணங்களுக்காக) வாய்ப்பு இருக்கிறது அல்லவா.

முத்துகிருஷ்ணன் மரணம், கொலையாக இருக்கலாமோ என்கிற கோணத்தில் விசாரணை நடத்தப்பட வேண்டியது அவசியம். விசாரணையின் போக்கை கண்காணிக்க வேண்டியதும் அவசியம்.

சமீபத்தில் ஒரு குடும்பத்தையே காவல் நிலையத்தி்ன் முன் போலீஸார் நிர்வாணமாக்கிவிட்டார்கள் என்று செய்தி வந்தது. பிறகு, அந்த குடும்பத்தினரே தங்கள் ஆடைகளை அவிழ்த்தெரிந்தார்கள் என்பது தெரியவந்தது.

விழுப்புரத்தில் செந்தில் என்பவர், தன் காதலியின் பெற்றோர் தன் கால்களை வெட்டிவிட்டார்கள் என்று ஊடகங்களில் அழுதார். அதை எல்லோரும் நம்பினோம்.பிறகு, குடிபோதையில் ரயில் முன் பாய்ந்ததால் கால்களை இழந்தார் என்பது தெரியவந்தது. அது மட்டுமல்ல.. அவர் காதலித்ததாய் சொன்ன பெண் (சிறுமி) காதலிக்க மறுத்ததால், அவள் மீது பெட்ரோல் ஊற்றி கொளுத்தி தானும் கொளுத்திக்கொண்டார் இருவரும் மாண்டனர்.

இதையெல்லாம் சொல்வதால், டில்லி மாணவர் முத்துகிருஷ்ணன், தனிப்பட்ட காரணங்களுக்காக தற்கொலைதான் செய்துகொண்டார் என்று நான் சொல்லவில்லை.

நெட்டிசன்களிடம் நான் கேட்டுக்கொள்வதெல்லாம்…

அவசர தீர்ப்பு வேண்டாம் என்பதே!