இந்தூர்: இந்தூரில் ஆக்சிஜன் ஏற்றி வந்த டேங்கர் லாரியை நிறுத்தி வைத்து ஊடகங்களுக்கு அரசியல்வாதிகள் போட்டோவுக்கு போஸ் கொடுத்த சம்பவம் பெரும் விமர்சனங்களுக்கு வழிவகுத்துள்ளது.
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றானது முன் எப்போதும் இல்லாத வகையில் பரவி வருகிறது. அதன் காரணமாக மருத்துவமனைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை ஒரு பக்கம், அதிகரிக்க, அதிகரிக்க ஆக்சிஜன் சிலிண்டர் அனைத்து மருத்துவமனைகளிலும் பற்றாக்குறையாக இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந் நிலையில் இந்தூரில் ஆக்சிஜன் ஏற்றி வந்த டேங்கர் லாரியுடன் ஊடகங்களுக்கு அதிகாரிகள் போட்டோவுக்கு போஸ் கொடுத்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இந்தூரில் மருத்துவமனைகளுக்கு ஆக்சிஜன் வழங்க குஜராத்தில் இருந்து 30 டன் ஆக்சிஜனுடன் ஒரு டேங்கர் லாரி நேற்று இந்தூர் வந்து சேர்ந்தது.
குறிப்பிட்ட இலக்கில் அந்த லாரி சென்று சேரும் முன்பாக வழியில் 2 இடங்களில் 2 மணி நேரத்துக்கும் மேலாக ஊடகங்களுக்கு விவரத்தை தெரிவிக்க பாஜகவினர் லாரியை நிறுத்தி வைத்தனர். ஊடகத்தினர் வரும் வரை லாரியை அங்கேயே அவர்கள் நிறுத்தி வைத்தனர்.
பின்னர், பாஜக எம்பி சங்கர் லால்வானி, எம்எல்ஏக்கள் ரமேஷ் மென்டேலா, ஆகாஷ் விஜயவர்ஜியா ஆகியோர் டேங்கர் லாரியை பெற்றுக் கொண்டனர்.இது குறித்து டேங்கர் லாரி ஓட்டுநர் சைலேந்திர குஷ்வா கூறியதாவது: வழி நெடுகிலும் நான் எங்கும் தூங்கவில்லை. கொரோனா காலங்களில் ஆக்சிஜன் எவ்வளவு முக்கியமானது என்பதை நாங்கள் அறிவோம் என்றார்.