டெல்லி: நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் பிறந்த நாளான ஜனவரி 23ம் தேதி, ஒவ்வொரு ஆண்டும், ”பராக்கிரம் திவாஸ்” அதாவது, பராக்கிரம தினமாக, கொண்டாடப்படும் என மத்திய கலாச்சார அமைச்சகம் அறிவித்து உள்ளது.
இந்திய மக்களால் நேதாஜி என்று மரியாதையுடன் அழைக்கப்படுபவர் சுபாஷ் சந்திர போஸ். இரண்டாம் உலகப் போர் நடைபெற்ற போது வெளிநாடுகளில் போர்க் கைதிகளாய் இருந்த நூற்றுக்கணக்கான இந்தியர்களை ஒன்று திரட்டி இந்திய தேசிய ராணுவத்தை உருவாக்கி அப்போது இந்தியாவை ஆட்சி செய்த ஆங்கிலேயருக்கு எதிராகத் தாக்குதல் நடத்தியவர். இவர் 1945 ஆகஸ்ட் 18 அன்று தைவான் நாட்டில் ஒரு விமான விபத்தில் இறந்து விட்டதாக கருதப்பட்டாலும், அவர் அப்போது இறக்கவில்லை என்பதற்குப் பல சான்றுகள் உள்ளன.
அவர் ரஷ்யாவிற்கு சென்று 1970களில் இறந்துவிட்டதாகவும், அல்லது ஒரு துறவியின் வடிவில் வடஇந்தியாவில் மறைமுகமாக வாழ்ந்து 1985இல் இறந்துவிட்டதாகவும் பல கருத்துக்கள் உள்ளன. இந்திய அரசால் நியமிக்கப்பட்டு இதைப்பற்றி விசாரித்த முகர்ஜி கமிஷன், நேதாஜி அவ்விமான விபத்தில் இறக்கவில்லை எனத் தெரிவித்து விட்டது.
1992-ம் ஆண்டு சுபாஷ் சந்திரபோஸுக்கு இறப்புக்குப் பின்னான இந்தியாவின் மிக உயரிய விருதான பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது. ஆனால் விருது வழங்கும் குழுவால் சுபாஷ் சந்திர போஸின் இறப்பு குறித்த ஆதாரங்களைத் தர முடியவில்லை எனவே உச்சநீதிமன்ற ஆணையின்படி இவ்விருது திரும்ப வாங்கப்பட்டது.
இந்த நிலையில், “நேதாஜி சுபாஸ் சந்திரபோஸின் 125 வது பிறந்தநாளில், அவரை கவுரவிக்கும் வகையில், ”பராக்கிரம் திவாஸ்” என்ற பெயரில் ஜனவரி 23ந்தேதி ஆண்டுதோறும் கொண்டாட முடிவு செய்யப்பட்டு உள்ளது.
தேசிய மற்றும் சர்வதேச நிலையில், 2021 ஜனவரி முதல் சிறப்பான வகையில் கொண்டாட மத்திய கலாச்சார அமைச்சகம் (Central Government) முடிவு செய்துள்ளதாக மேலும், தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொல்கத்தாவில் உள்ள விக்டோரியா நினைவிடத்தில் நடைபெற உள்ள நேதாஜி சுபாஸ் சந்திரபோஸின் பிறந்த நாள் கொண்டாட்டங்களில் கலந்து கொள்ள பிரதமர் மோடி ஜனவரி 23 அன்று மேற்கு வங்காளத்திற்கு செல்வார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.