காத்மண்டு: நேபாள நாடாளுமன்றத்தை கலைத்தது செல்லாது என்று அந்நாட்டு உச்சநீதிமன்றம் அரசியல் பரபரப்பு வாய்ந்த தீர்ப்பை வழங்கியுள்ளது.
நேபாளத்தில், கடந்த 2 ஆண்டுகளாகவே அரசியல் சிக்கல் நிலவி வந்தது. ஆளும் கட்சியினர் இரு அணிகளாக செயல்பட்டனர்.
கடந்தாண்டு டிசம்பரில், பிரதமர் சர்மா ஒலி தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில், நாடாளுமன்றத்தை முன்கூட்டியே கலைக்க, அதிபருக்கு பரிந்துரைக்கப்பட்டது. இதையடுத்து அவையை உடனடியாக கலைத்து கடந்தாண்டு டிசம்பர் 20ம் தேதி அதிபர் பித்யா தேவி பண்டாரி உத்தரவிட்டார்.
நாடாளுமன்றத்தை கலைத்ததை எதிர்த்து, அதன் உறுப்பினர்கள் மற்றும் சிலர், நேபாள உச்ச நீதிமன்றத்தில் பல மனுக்கள் தாக்கல் செய்தனர். அனைத்து மனுக்களை மீதான விசாரணை, தலைமை நீதிபதி உள்ளிட்ட ஐந்து நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு விசாரித்து வந்தது. இதனிடையே, இன்று நடந்த விசாரணையில் நாடாளுமன்றத்தை கலைத்தது செல்லாது எனவும், 13 நாட்களுக்குள் மீண்டும் அவையைக் கூட்ட வேண்டும் எனவும் பரபரப்பு தீர்ப்பளித்தது உச்சநீதிமன்றம்.