நேபாள பிரதமர் பதவி விலக சொந்தக்கட்சியினர் போர்க்கொடி..

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளைச் சரியாகக் கையாளவில்லை என நேபாள பிரதமர் கே.பி.சர்மா ஒளி மீது, அந்த நாட்டு மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.

இந்த பிரச்சினையைத் திசை திருப்பும் வகையில், இந்தியாவுக்குச் சொந்தமான மூன்று இடங்களை, தனது நாட்டுடன் இணைத்து புதிய வரை படத்தை வெளியிட்டுள்ளது, ஒளியின் அரசாங்கம்.

உள்நாட்டில் இதற்கு ஆதரவு கிடைக்காத நிலையில், இரு தினங்களுக்கு முன்பு நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஒளி,’’ என்னைப் பிரதமர் பதவியில் இருந்து கவிழ்க்க முயற்சி நடக்கிறது’’ என்று குற்றம் சாட்டி இருந்தார்.

தன்னை அகற்றும் முயற்சியில் இந்தியா ஈடுபட்டுள்ளது என அவர் மறைமுகமாகக் கூறினார்.

இந்நிலையில் நேபாள கம்யூனிஸ்ட் கட்சியின் உயர் அதிகார குழுவான, அதன் நிலைக்குழு கூட்டம் காட்மண்டுவில் பிரதமர் ஒளியில் இல்லத்தில் நடைபெற்றது.

இதில் பேசிய முன்னாள் பிரதமர் பிரசண்டா’’ தன்னை கவிழ்க்க இந்தியா சதி செய்வதாகப் பிரதமர் சொல்லி இருப்பதை ஏற்க முடியாது. அவரது கருத்து அண்டை நாட்டுடனான உறவைப்  பாதிக்கும்,’’ என்று கண்டனம் தெரிவித்தார்.

கூட்டத்தில் பங்கேற்ற மூத்த கம்யூனிஸ்ட் தலைவர்கள்’’ தன்னை கவிழ்க்கச் சதி நடப்பதாகக் கூறும் பிரதமர் ஒளி அதற்கு ஆதாரங்களைக் காட்ட வேண்டும். இல்லை என்றால் அவர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்’’ என்று வலியுறுத்தியுள்ளனர்.

இந்த கூட்டத்தில் பங்கேற்ற ஒளி, தனது எதிர்ப்பாளர்களுக்குப் பதில் எதுவும் சொல்லாமல் மவுனமாக இருந்துள்ளார்.

பிரதமருக்கு எதிராகச் சொந்த கட்சியினரே போர்க்கொடி உயர்த்தி இருப்பது நேபாளத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

-பா.பாரதி