அயோத்தியைச் சொந்தம் கொண்டாடிய நேபாள பிரதமர்: திடீர் பல்டி..

இந்தியாவுக்குச் சொந்தமான சில பகுதிகளை நேபாள நாட்டுடன் இணைத்து ஒரு வரை படத்தை வெளியிட்டு பிரச்சினையை உருவாக்கி இருந்தார், அதன் பிரதமர் சர்மா ஒளி.

இந்த நிலையில் நேபாள நாட்டுத் தலைநகர் காட்மண்டுவில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர் ’’ராமர், இந்தியாவுக்குச் சொந்தமானவர் அல்ல, அவர்  நேபாளத்தில் பிறந்தவர்- ’ஒரிஜினல்’ அயோத்தி நேபாளத்தில்  உள்ளது’’ என்று . சர்ச்சை கருத்தை வெளியிட்டார்.

‘’ராமர் பிறந்த அயோத்தி இந்தியாவில் இருந்தது என்றே வைத்துக்கொள்வோம். ஆனால் அவர் மணம் முடித்த சீதையின் ஊரான ஜனகபுரம், நேபாளத்தில் அல்லவா உள்ளது. தொலைப்பேசி மற்றும் செல்போன் வசதி இல்லாத அந்தக்காலத்தில் சீதை குறித்து ராமர் எப்படி அறிந்திருக்க முடியும்?’’ என்று  விஷமமாகவும் பேசினார்.

ஒளியின் கருத்துக்கு இந்தியாவில் எதிர்ப்பு ஏற்பட்டுள்ள நிலையில், நேபாள பிரதமர் ஒளியின் கருத்துக்கு அந்த நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.

‘’பிரதமர் ஒளியின் பேச்சில் அரசியல் நோக்கம் ஏதும் கிடையாது. யார் மனதையும் புண் படுத்தும் எண்ணத்துடன் அவர் கருத்து கூறவில்லை.

ராமர் பிறந்த இடம் குறித்துப் பல கதைகள் இருப்பதால், இது குறித்து மேலும் ஆராய்ச்சி நடத்தப்பட வேண்டும் என்ற கருத்தையே பிரதமர் வெளியிட்டார்’’ என நேபாள வெளியுறவு அமைச்சகம்  தங்கள் பிரதமர் சார்பில் ‘பல்டி’ அடித்துள்ளது.

-பா.பாரதி.